ராகுல் பலத்த சிபாரிசு.. திருச்சியை கைப்பற்றினார் திருநாவுக்கரசர்!?
சென்னை: ராகுல் காந்தியின் பலத்த சிபாரிசுடன் திருச்சி தொகுதியை திருநாவுக்கரசர் உறுதிப்படுத்தி விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014 ல் விருதுநகரில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய வைகோ இம்முறை எப்படியும் மக்களவை தேர்தலில் வென்று மக்களவைக்கு சென்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அதற்கு தனக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக திருச்சியை அடையாளம் கண்டவர் கடந்த ஓராண்டாக பல்வேறு கல்லூரிகளில் சொற்பொழிவுகள், கூட்டங்கள் என திருச்சியை சுற்றியே வலம்வந்தார் வைகோ.
இந்நிலையில் திமுக கூட்டணியில் தங்களுக்கு 4 இடங்கள் 3 இடங்கள் என்று கேட்டுவந்தவர் பின்னர் குறைந்தது இரண்டு இடங்களாவது கொடுங்கள் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் இவருக்கு இரண்டு இடங்கள் கொடுக்க சபரீசன் முதல் திமுகவில் மூத்த தலைவர்கள் பலரும் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இதையடுத்து ஒரு மக்களவை சீட்டும் ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியும் கொடுக்க திமுக முன்வந்தது.

கடும் போட்டி
இந்த டீலை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட வைகோ தான் திருச்சி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தாராம். அதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் வந்துள்ளது ஆப்பு. திருநாவுக்கரசரும் திருச்சி தொகுதியையே கேட்டுள்ளார். திருநாவுக்கரசரின் சொந்த மாவட்டம் புதுக்கோட்டை.

ராமநாதபுரத்தில் அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த எம்.பி தொகுதியும் வரவில்லை. காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் என்று இந்த தொகுதிகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கியுள்ளது. இதில் திருநாவுக்கரசரின் சொந்த ஊர் அறந்தாங்கி ராமநாதபுரம் தொகுதிக்குள் போய் விட்டது. ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டு விட்டது. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் அல்லது மருமகள் ஸ்ரீநிதி போட்டியிட கேட்டுள்ளனராம். இதனால் தனக்கு திருச்சி தொகுதி வேண்டுமென்று கேட்டுள்ளார் திருநாவுக்கரசர்.

மெசேஜ் அனுப்பிய ராகுல்
திருநாவுக்கரசரும், வைகோவும் திருச்சியை கேட்டதால் ஸ்டாலின் இந்த தொகுதியை யாருக்கு வழங்குவது என்று குழம்பியுள்ளார். இப்படி இங்கு குழப்பம் நீடிக்கவே நேரடியாக டெல்லிக்கு பிளைட் பிடித்த திருநாவுக்கரசர் ராகுலிடம் "எனக்கு அந்த திருச்சி வேணும்" என்று அடம்பிடித்துள்ளார். இவரை தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்து தூக்கும்போதே உங்களுக்கு உரிய நேரத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று ராகுல் உறுதியளித்திருந்தாராம். அதனால் அவரும் திருநாவுக்கரசரிடம் ஓகே சொல்லியிருக்கார். பின்னர் இந்த தகவல் ஸ்டாலினுக்கு பாஸ் செய்யப்பட ஸ்டாலினாலும் மறுக்க முடியவில்லை என்கிறார்கள் திமுகவினர்.

திருச்சி உறுதி
இதனால் வேறு வழியின்றி ஸ்டாலின் வைகோவை சமாதானம் செய்துள்ளார். நீங்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தால்தான் நாம் 40/40 ஐ பெற முடியும். அதோடு நீங்கள் மாநிலங்களவைக்கு சென்று தமிழகத்தின் குரலை அங்கு ஓங்கி ஒலிக்க செய்யவேண்டும் என்று கூறி சமாதானம் செய்தாராம். அதன் பிறகே வைகோ ஈரோட்டில் கணேசமூர்த்தியை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறுகிறார்கள் திமுகவினர். ஆக இறுதியில் தனது விருப்பத்தை ராகுல் மூலம் நிறைவேற்றிவிட்டார் திருநாவுக்கரசர் என்கிறார்கள் திமுகவினர்.












Click it and Unblock the Notifications