திருச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜொலித்த தங்கம்! ஒரே மாசத்தில் உண்டியலில்? பக்தர்கள் குஷி
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை மாதம் மாதம் எண்ணப்படுகிறது.. அந்தவகையில், கடந்த மாதம் எண்ணப்பட்ட உண்டியலில், 99 லட்சத்து 54 ஆயிரத்து 404 ரூபாய் கிடைத்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், உண்டியல் நிரம்பிவிட்டதால் மீண்டும் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டுள்ளது.. இதுகுறித்த விவரங்கள் தான் தற்போது வெளியாகியிருக்கின்றன.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையானது, ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில், தமிழக கோயில்களில் கடந்த 10 வருடத்தில் காணிக்கையாக கிடைக்க பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்ற நகைகளை மும்பையில் செயல்படும் மத்திய அரசுக்கு சொந்தமான தங்கம் உருக்காலையில் உருக்கப்படும்.

பிரிக்கப்படும் தங்கம்
பிறகு அதனை சுத்த தங்கமாக மாற்றி, இறுதியாக கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தது..
அத்துடன், அறநிலையத்துறை சார்பில், மூன்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கோயில்களுக்கு சென்று, காணிக்கையாக வந்துள்ள தங்கங்களில் மீதுள்ள அழுக்குகள், அரக்கு, கற்கள் உள்ளிட்டவற்றை நீக்கிவிட்டு, தூய்மைப்படுத்தி தரம் பிரித்து அளவிடுவார்கள்.
இப்படித்தான் 3 மாதங்களுக்கு முன்புகூட திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்கத்தை தரம் பிரிக்கும் பணி நடந்தது.. சக்தி தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையாக விளங்கக்கூடிய சமயபுரம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும். அப்போது தங்கம், பணம் உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள்.
வெள்ளி, தங்கம்
இந்த காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படும்.. இதில், தங்கம், வெள்ளி இருந்தால் மட்டும், அவை கோயில் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.. இந்த நகைகளை அதிகாரிகள் சரிபார்த்து தூய்மையான தங்கமாக மாற்றி, இறுதியில் மும்பையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் டெபாசிட் செய்துவிடுவார்கள்.
அதுபோல, கடந்த செப்டம்பர் மாதமும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில், ஹைகோர்ட் முன்னாள் நீதிபதிகள் ரவிசந்திரபாபு மற்றும் மாலா ஆகியோர் முன்னிலையில் உண்டியலில் விழுந்த கிட்டத்தட்ட 365 கிலோ தங்க நகைகளை சரிபார்ப்பு பணி நடந்தது நினைவிருக்கலாம்.
நிரம்பி வழிந்த உண்டியல்
இந்நிலையில், உண்டியல் நிரம்பிவிட்டதால், சமயபுரம் மாரியம்மன் கோவில் காணிக்கை தற்போது எண்ணப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்..
அதில், உண்டியல் காணிக்கை மூலம் மட்டுமே 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல, 1 கிலோ 942 கிராம் தங்கம், 3 கிலோ 280 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கிய உண்டியல் காணிக்கையானது, பக்தர்களுக்கு வியப்பை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications