இது ரவுடிகளுக்கு எச்சரிக்கை.. காவல்துறை மீது கை வைத்தால் நடவடிக்கை பாயும்.. திருச்சி ஆணையர் பேட்டி!
துப்பாக்கிச்சூடு சம்பவம் ரவுடிகளுக்கான எச்சரிக்கை என்று திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா கூறியுள்ளார்.
திருச்சி: காவல்துறையினர் மீது குற்றவாளிகள் தாக்குதல் நடத்தினால், நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார். அதேபோல், திருச்சியில் நடந்துள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம் ரவுடிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்றும் சத்திய பிரியா தெரிவித்துள்ளார்.
திருச்சி எம்ஜிஆர் நகரில் வசிக்கும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் என்பவர் நகை திருட்டு தொடர்பாக, துரை, சோமசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
குழுமாயி அம்மன் கோயில் அருகே நகை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நகை இருக்கும் இடத்தை கண்டறிய இருவரும் காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, துரை, சோமசுந்தரம் ஆகியோர் காவல் ஆய்வாளர் மோகனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். முட்புதரில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் அரிவாளை கொண்டு ஆய்வாளர் மோகன், தலைமை காவலர்கள் சிற்றரசு, அசோக் ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

திருச்சியில் துப்பாக்கிச்சூடு
இதனையடுத்து காவல்துறையினர் தங்களை தற்காத்து கொள்ள இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரையும் மடக்கி பிடித்தனர். காயமடைந்த அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிடிபட்ட இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

காவல் ஆணையர் விளக்கம்
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து காவல் ஆணையர் சத்திய பிரியா கூறுகையில், துரை மற்றும் சோம சுந்தரம் அகிய இருவரும் தேடப்படும் குற்றவாளிகள். கிட்டத்தட்ட இவர்கள் பேரில் 60 முதல் 70 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேபோல் 25 சம்மன்கள் அளிக்கப்பட்டும் அவர்கள் ஆஜாராகாமல் இருந்துள்ளனர். இதுதொடர்பாக சிறப்பு தனிப்படை காவலர்கள் தேடி வந்துள்ளனர். இதனிடையே கொள்ளை வழக்கு தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர் நகையை மீட்பதற்காக அழைத்து சென்ற போது, காவல்துறையினரை இருவரும் தாக்கியுள்ளனர். இதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.

எச்சரிக்கை
தொடர்ந்து, குற்றவாளிகளின் கைகளில் ஆயுதங்கள் வந்தது எப்படி என்ற கேள்விக்கு, குற்றவாளிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையினரிடம் இருந்தது. இதனிடையே வாகனம் விபத்தை சந்தித்த போது, அந்த ஆயுதங்களை கைப்பற்றி காவல்துறையினர் மீது கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை ரவுடிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அளிக்கிறோம் என்று தெரிவித்தார்.

கடும் நடவடிக்கை
அதேபோல், சட்டப்படி தண்டனை பெற்று கொடுப்பதில் சிரமம் இருப்பதால் இதுபோல் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதா என்ற கேள்விக்கு, நாடகமெல்லாம் இல்லை. குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கை முடிக்கவே காவல்துறையினர் முயற்சிக்கிறோம். ஆனால் காவல்துறையினரை தாக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
