உண்மையான நாட்டுப்பற்று என்பது மக்கள் மீதான பற்றுதான்.. முதல்வர் ஸ்டாலின் சொன்னவுடன் அதிர்ந்த அரங்கம்
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சாரண, சாரணியர் இயக்க வைரவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வெகுவாக பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இது மணப்பாறையா இல்லை, பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாணவர் பாசறையா என்று சந்தேகப்படும் அளவுக்குச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷை நான் பாராட்டுகிறேன்.

அவரை நான் சிறு வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று தனது உரையைத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டார்.
முதல்வர் ஸ்டாலின்:
தொடர்ந்து பேசிய அவர், "இன்றைக்கு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாட்டிற்கே பெரும் புகழை ஈட்டித் தருகிறது. இந்தப் புகழ், இந்தியப் புகழ். இன்னும் சொன்னால், உலகப் புகழ். சாரண, சாரணியர் இயக்கம், உலக அளவிலான இளைஞர்களின் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. சாரண, சாரணியர் இயக்கத்தில் எட்டில் ஒரு பங்கு நாம் இந்தியா முழுவதும், 80 இலட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவங்களின் எண்ணிக்கை மட்டும் 12 லட்சம் மாணவர்கள். எட்டில் ஒரு பங்கு நாம் இருக்கிறோம்.
எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டின் பங்கு என்பது, எப்போதும் அதிகமாக தான் இருக்கும் என்பதை சாரணர் இயக்கத்திலும் உண்மை ஆக்கியிருக்கிறோம். நீங்கள் பங்கு பெற்றிருக்கும் சாரணர் இயக்கம் என்பது, உடலினை உறுதிசெய்யும் இயக்கமாக, உள்ளத்தை உறுதிசெய்யும் இயக்கமாக, ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமாக, ஒழுங்கை உருவாக்கும் இயக்கமாக இருக்கிறது.
உங்கள் எல்லோரையும் இந்த சீருடையில் பார்க்கும்போது என்னுடைய உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏன் என்றால், நாளைய குடிமக்களான இளைய தலைமுறையிடம் சமூக சேவை செய்தல், உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல் போன்ற பல்வேறு திறன் வளர்ப்பிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது.
நாட்டுப்பற்று
மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று இந்த நேரத்தில் நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவது, நாட்டுப்பற்று என்பது, நிலத்தின் மீதான பற்று என்பதை கடந்து, மக்கள் மீதான பற்றாக வளரவேண்டும். மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப் பற்று. இப்படி, இளைய தலைமுறைய இனிய தலைமுறையாக இந்த சாரணர் இயக்கம் மாற்றுகிறது. ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளரவேண்டும் என்ற நோக்கத்தோடு தான், ராணுவ வீரரான பேடன் பவல், இந்த இயக்கத்தை உருவாக்கினார்.
சாரண, சாரணியர் இயக்கத்தின் இந்த பெருந்திரளணி, ஒவ்வொரு நாட்டிலும், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரைக்கும் 18 பெருந்திரளணிகளும், 5 சிறப்பு பெருந்திரளணிகளும் நடந்திருக்கிறது. 2000-ஆவது ஆண்டில் தமிழ்நாட்டில் சாரண சாரணியர் இயக்கப் பொன் விழா பெருந்திரளணி நடந்தபோது, தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி அன்றைக்கு அதை நடத்திக்காட்டினார். இப்போது வைரவிழா கொண்டாடும்போது நான் முதல்வராக இருக்கிறேன்.
கருணாநிதி:
கருணாநிதி தான், இந்த நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை உருவாக்கியது அவர்தான். எனவே, அவரது நூற்றாண்டு விழாவை நீங்கள் கொண்டாடுவது பொருத்தமானதுதான். நாம் எல்லோரும் சமத்துவத்துடனும், சகோதரத்துவ உணர்வோடும் ஒன்றிணைந்து இந்தியர் என்ற பெருமிதத்தோடு, ஒற்றுமையுடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்.
அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான குழந்தைகள் ஒற்றுமையாக ஒரே இடத்தில் ஒன்றுகூடி, தங்களின் பண்பாட்டை பகிர்ந்துகொள்ளவும், வளர்த்து கொள்ளவும், அன்பை மேம்படுத்திடவும் மாபெரும் இந்த பெருந்திரளணி நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”-என்று கணியன் பூங்குன்றனார் அவருடைய முதுமொழிக்கேற்ப சவுதி அரேபியா, மலேசியா, இலங்கை, பாளம் மற்றும் இந்தியாவை சேர்ந்த பல மாநிலங்கள் ஒருங்கிணைந்து கடந்த 6 நாட்களாக ஒரே குடும்பமாக இருப்பது தான் நம்முடைய அன்பின் வலிமை.
திராவிட மாடல் அரசால்:
நம்முடைய திராவிட மாடல் அரசால், இந்த விழாவை வெகு சிறப்பாக கொண்டாடும் வகையில் பெருந்திரளணி சபை, திட்டக்குழு,தொழில்நுட்பக்குழு, செயல்பாட்டுக் குழுக்கள் உள்ளிட்ட 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழாவில் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் கலந்துக்கொண்டு தங்களின் பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.
இந்திய நாடு பெற்ற விடுதலை என்பது ஒற்றுமையால் பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாம் எல்லோரும் சமம் என்ற உணர்வோடு ஒற்றுமையாக போராடியதால்தான் நாடு விடுதலை பெற்றது. அந்த ஒற்றுமை உணர்வை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது. உள்ளம் ஒன்றாக இருக்கட்டும் இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். மானுடத் தத்துவத்தால் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளமும் நமக்கு இருந்தாக வேண்டும். கூடாரங்கள் தனித்தனியாக இருக்கட்டும் ஆனால் உள்ளம் ஒன்றாக இருக்கட்டும் என்று சொல்வார்கள். அப்படி, எங்கிருந்தோ இங்கு வந்து ஒன்றாக தங்கிய நீங்கள் எல்லோரும் இங்கிருந்து பிரிந்து சென்றாலும் உள்ளத்தால் ஒருவர் என்ற உணர்வோடு செல்லவேண்டும்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications