ஆகாஷ் டிரில்.. ஓயாத ரிக்.. பலூன் டெக்னாலஜி.. ஓய்வின்றி தொடரும் முயற்சிகள்.. எப்போது வருவாய் சுஜித்!
குழந்தை சுஜித்தை மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
Recommended Video
மணப்பாறை: பலூன் முறை மற்றும் ரிக் இயந்திரம், போர்வெல் மிஷினை வைத்து குழி தோண்டும் முறை என பல்வேறு வழிமுறைகளை சுஜித்தை மீட்க பல தரப்பினரும் பரிந்துரைத்த வண்ணம் உள்ளனர்.
குழந்தை சுஜித் விழுந்து 4 நாள் ஆகிறது. எத்தனையோ வழிகளை கையாண்டும் அவனை இன்னும் மீட்டு கொண்டு வர முடியவில்லை.
முதலில் பலூன் முறையை பயன்படுத்த முயற்சி நடந்தது. கவ்வி காப்பாற்ற முடியாத அளவிற்கு சுஜித் குழிக்குள் சிக்கியுள்ளான். இப்போது போடப்பட்டு வரும் துளை நான்கரை இன்ச்தான்.. இந்த நான்கரை இன்ச் குழியில், பலூனை செலுத்தகூட இடம் இல்லை என்கிறார்கள். பலூன் முறை கை கொடுக்காத காரணத்தினால், ரிக் மிஷின் கொண்டு துளையிடப்படுகிறது.

ஆழ்துளை கிணறு
டங்ஸ்டன் கார்பைடு இயந்திரம்தான் இந்த குழியை போட பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, பாறையை அப்படியே துளைத்து எடுத்தாலும் பக்கத்தில் உள்ள ஆழ்துளை கிணறு நொறுங்கிவிடும். எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜெர்மன் மெஷினை கொண்டுதான் துளை போடுவது நடக்கிறது. அதேபோல் புதிதாக குழி தோண்டப்படும்போது அதிர்வு ஏற்பட்டு கிணற்றுக்குள் நெருப்பு பற்றி கொள்ளும் அபாயம் உள்ளதாம். ஏற்கனவே குழந்தையின் மீதும் ஒரு அங்குல மண் இருப்பதால், ஜாக்கிரதையாகவே துளையிடும் பணி நடக்கிறது.

இரும்பு பற்கள்
ரிக் மெஷின் என்பது அதி தொழில்நுட்பம் வாய்ந்தது என்கிறார்கள். ஆனால், மணப்பாறை பாறைகளோ கடினமாக இருப்பதால், இந்த மிஷினே அடிக்கடி பழுதாகிறது. இந்த மிஷினை வைத்து பாறைகளை உடைத்து நொறுக்கும்போது, இதன் பற்கள் பாறைக்கு எதிர்திசையில் திரும்பி விடுகிறது... எல்லாமே இரும்பு பற்கள்தான்... ஆனாலும் நொறுக்கும்போது, பற்கள் உடைந்து விழுகின்றன.

ஆகாஷ்
விடிகாலையில் இப்படிதான் கோளாறு ஏற்பட்டது.. இப்போதும் இப்படி கோளாறு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் இரும்பு பற்களை சரிசெய்து அதன்பிறகே பள்ளம் நோண்டும் பணி நடக்கிறது. இப்படி பற்களை சரிசெய்ய 20 நிமிடமாவது ஆவதால், அந்தநேரத்தில் குழி தோண்டும் வேலை தடைபடுகிறது. கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற டிரில் பிட் வருகிறது. அதி நவீன டிரில் மெஷின் ஆகாஷ் வந்ததும், டிரில் பணி மேலும் வேகமடையும் என தெரிகிறது.

போர்வெல்
இப்போதைக்கு 45 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் மிஷினை வைத்து 35 அடியும், 2-வது ரிக் மிஷினை வைத்து 10 அடிக்கும் பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் ரிக் மெஷின் அடிக்கடி கோளாறு அடைவதால், போர்வெல் மூலமாக பாறைகளை உடைக்க திட்டமிடப்பட்டு, அந்த வேலையும் ஆரம்பமாகி உள்ளது. இந்த போர்வெல் போடும் வேலையில் 10 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீச்சல் வீரர்கள்
இதைதவிர மெரைன் வீரர்கள் அதாவது கடலுக்கு அடியில் செல்லும் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் கடலுக்கு அடியில் எப்படி சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்குவார்களோ, அதுபோலவே இதிலும் முயற்சி செய்ய உள்ளனர். அப்படி மண்ணுக்குள் வாயு கசிவு இருந்தாலும் மீட்டுவிடுவோம் என்று இவர்கள் சொல்கிறார்கள். தூத்துக்குடியில் இருந்து இந்த நீச்சல் வீரர்கள் வந்துள்ளனர்.

ஓயாத போராட்டம்
நடுநடுவே மழையும் பெய்து வந்தாலும், அதையெல்லாம் வீரர்கள் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர். பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்துசம்பவ இடத்துக்கு டூவீலர்களில் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களையும் ஒரு பக்கம் போலீசார் சமாளித்து வருகின்றனர். ஆகாஷ், ரிக், பலூன்.. முயற்சிகளுக்கு இடையே.. கொட்டும் மழையிலும்.. வீரர்கள் கனத்த இதயத்துடன் சுஜித்தை மீட்க போராடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications