“மாஸ் திட்டம்?” விரைவில் மாநாடு.. காத்திருக்குது தமிழ்நாடு! திருச்சியை பரபரக்க வைத்த விஜய் ரசிகர்கள்
திருச்சி : நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டை திருச்சியில் நடத்தவேண்டும் என விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், அரசியலிலும் தீவிரமாக இறங்கிச் செயல்படும் எண்ணத்தில் இருந்து வருவதாகத் தெரிகிறது. தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு மக்கள் நலப் பணிகளை அவ்வப்போது செய்து வருகிறார் விஜய்.

அரசியலில் இறங்குவதாக விஜய் அறிவிக்காவிட்டாலும், கடந்த ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை நேரில் அழைத்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜய்.
விஜய் மக்கள் இயக்கத்திலும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ஆம் தேதி ஒவ்வொரு மாவட்டமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் விழாவையொட்டி அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள், திருச்சியில் விரைவில் மாநாடு எனக் குறிப்பிட்டு சுவர் விளம்பரங்கள் செய்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி. ஜூன் மாதத்தில் மதுரை அல்லது கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் அரசியல் மாநாடாக நடத்த விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் தான் "திருச்சி என்றாலே திருப்பம் தான்.. விரைவில் மாநாடு.. காத்திருக்குது தமிழ்நாடு! வா தலைவா!" என சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சியில் மாநாடு நடத்துமாறு கோரிக்கை விடுத்து திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா , முன்னாள் நிர்வாகிகளான மும்பை பவுல் பாரதிராஜா, ஹரிஹரன் உள்ளிட்டோரின் பெயர்களில் இந்த சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன.
ஏற்கனவே, கடந்த 2020ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அரசியல் கட்சி துவங்கியதால் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து ஆர்.கே.ராஜா நீக்கப்பட்டார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் அவர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
