உதயசூரியன் சின்னம் வேண்டாம்.. பம்பரம் இல்லை என்றாலும் பிரச்சனையில்லை.. துரை வைகோ உறுதி
திருச்சி: வரும் லோக்சபா தேர்தலில் பம்பரம் இல்லாவிட்டால் தனிச்சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெற முடியும் என திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதன்மூலம் திமுகவின் உதயசூரியன் சின்னம் வேண்டாம் என்பதை மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்நத தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். மதிமுக தனிச்சின்னத்தில் களமிறங்க தயாரக உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக கூறினாலும் மதிமுக மறுத்து வருகிறது.

மேலும், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய துரை வைகோவும், "செத்தாலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்" என்று கண்ணீர் மல்க பேசினார். இதற்கிடையே தான் தேர்தலில் பம்பரம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்தபோது மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உறுதிப்பட தெரிவித்துவிட்டது. இத்தகைய சூழலில் தான் மதிமுகவுக்கு வேறு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க உள்ளது. மதிமுக சார்பில் தீப்பெட்டி அல்லது கியாஸ் சிலிண்டர் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் துரை வைகோ இன்று இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மதிமுக சின்னம் தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் கூறியதாவது: நாங்கள் எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளோம் என்பதை நாளை தெரியப்படுத்துவோம். சின்னம் தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தர்கள் விவாதித்து வருகின்றனர். நாளை சின்னம் பற்றி அறிவிப்போம். சின்னம் என்பது எந்த வகையிலும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது.
பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்களுக்கு கிராம மக்கள் கட்சி சின்னத்தை தவிர்த்து சுயேச்சை சின்னங்களை பார்த்து வாக்களிக்கின்றனர். படிக்காத கிராம மக்கள் கூட புதிய சின்னத்தை பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர். இது நாடாளுமன்ற தேர்தல். மேலும் டிஜிட்டல் உலகமாக உள்ளது. தொகுதியில் 90 சதவீதம் மக்களிடம் செல்போன் உள்ளது. இன்று திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு வலுவான இணையதள அணி உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து 24 மணிநேரத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடலாம்.
கடந்த காலங்களில் இதேமாதிரி சுயேச்சை வேட்பாளர்கள் இடைத்தேர்தல்கள் வென்றுள்னளர். இதனால் சின்னத்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. உதயசூரியன், இரட்டை இலை, கை சின்னங்களுக்கு அதற்கான மதிப்பு என்று ஒன்று உள்ளது. ஆனால் இப்போது காலம் மாறிவருகிறது. மக்களை பொறுத்தமட்டில் வேட்பாளர் மீது நம்பிக்கை ஏற்பட்டால் அவரது கட்சி என்ன? சின்னம் என்ன? என தெரிந்து கொண்டு வாக்களிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். சின்னத்தால் எந்த பின்னடைவும் வராது.
இப்போது திருச்சி எம்பியாக திருநாவுக்கரசர் எம்பியாக உள்ளது. புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை தொகுதிகளில் சின்னத்தை கொண்டு போய் சேர்ப்பார். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜகவை பொறுத்தமட்டில் எதிர்க்கட்சிகள் செயல்பட கூடாது என நினைக்கிறது. அமலாக்கத்துறை மூலம் ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
மேலும் எங்களுக்கு சின்னம் கிடைக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பானை சின்னத்துக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லை. கூட்டணியில் இல்லாத நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. அதேவேளையில் பாஜக கூட்டணியில் அமமுக, தமாகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தக்க பாடத்தை மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு புகட்டுவார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications