திருச்சி சிறையில் கம்பி எண்ணும் பெண்.. ஒரே வீடியோவால்.. ஒரே நாளில் தலைகீழான வாழ்க்கை
திருச்சி: திருச்சியில் நாய்குட்டியால் சிறையில் கம்பி எண்ணும் பெண் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தெருநாய்கள் பல ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்டநாய்கள் தான் தெருநாய்களாக சுற்றுகின்றன. போதிய உணவு கொடுத்து பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை தெருவில் விட்டு செல்கிறார்கள். அந்த நாய்கள் குட்டிகள் போடுகின்றன. அந்த குட்டிகள் உணவுக்கு ஏங்கும் நிலையே இருக்கிறது. அப்படி ஏங்கி வந்த இரண்டு குட்டி நாய்களால் இன்று ஒரு இளம் பெண் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவில் பிறந்து சில நாட்களே ஆன சில நாய்க்குட்டிகள் ஒரு வீட்டின் முன்பு குழந்தை போல துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் இருந்து ஒரு பெண் இறங்கி இருக்கிறார். இதைக் கண்ட வாயில்லா ஜீவன்களான நாய்க்குட்டிகள் தங்களுக்கு உணவு தரப்போகிறார் என்று ஏக்கத்துடன் வாலாட்டியபடி அருகில் சென்றன. துள்ளிக்குதித்து ஓடி வந்த நாய்களுக்கு அடுத்த சில நொடியில் நடக்க போவது தெரியாது.

ஏனெனில் ஆட்டோவில் இருந்து இறங்கிய பெண்ணோ அந்த நாய்க்குட்டிகளிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார். கோபத்தில் நாய்க்குட்டியை தூக்கி சுவரில் வீசினார். இதில் அந்த நாய்க்குட்டிகள் வீல் என்று சத்தத்துடன் கத்தியது. அதன்பின்னரும் அந்த பெண் கோபத்தின் உச்சிக்கு சென்று தன்னை நோக்கி ஓடி வந்த மற்றொரு நாய்க்குட்டியையும் தூக்கி சுவரின் மீது வீசியிருக்கிறார். இதில் அந்த 2 நாய்க்குட்டிகளும் கத்தியபடியே இருந்தன
அதுமட்டுமின்றி அந்த நாய்க்குட்டிகள் காப்பாற்ற வழியில்லாமல் சிறுது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தன பின்னர், அந்த பெண் எதிர்புறத்தில் உள்ள வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றுவிட்டார். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த காட்சியைக் கண்ட விலங்கின ஆர்வலர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் நடந்த பகுதியான கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர் திருச்சி பாய்லர் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மிஸ்ரா (வயது 28). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாகவும், வீட்டின் முன்பு தண்ணீர் தெளிப்பது தொடர்பாகவும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டிருந்ததாம்.
இந்த நிலையில் வெளியில் சென்று விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்த மீனாட்சி மிஸ்ராதான் கோபத்தில் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. வீட்டின் முன்பு வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில்தான் அவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் கூறினாராம். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சி மிஸ்ராவை அதிரடியாக கைது செய்தனர். மீனாட்சி மிஸ்ரா சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
பொதுவாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்படி, விலங்குகளைக் கொல்வது அல்லது ஊனப்படுத்துவது போன்ற செயல்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் (அல்லது இரண்டும்) விதிக்கச் சட்டத்தில் இடமுண்டு. எனவே இந்தக் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து (குறிப்பாக வீடியோ ஆதாரங்கள் வைரலாகியுள்ள நிலையில்), ஜாமீன் உடனடியாகக் கிடைப்பது கடினம் என்கிறார்கள்.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது அல்லது கொடூரமான முறையில் நடந்துகொள்வது போன்ற காரணங்களால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கத் தயங்கும். எனினும், இது வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது மாறும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications