பயங்கர ஷாக்.. ரூ.500 வாடகைக்கு குழந்தையை வாங்கி பிச்சையெடுத்த பெண்கள்? அதிர்ந்துபோன திருச்சி
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடி அமாவாசையையொட்டி இன்று தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இந்த வேளையில் ரூ.500 வாடகைக்கு குழந்தைகளை வாங்கி பெண்கள் பிச்சையெடுத்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடுவது உண்டு. அங்குள்ள அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்தி ஏராளமானவர்கள் பொதுமக்களிடம் யாசகம் கேட்பார்கள். பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள். இந்நிலையில் தான் இன்று ஆடி அமாவாசை தினத்தையொட்டி ஏராளமான மக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக அங்கு குவிந்தனர்.
இந்த வேளையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளை கையில் வைத்து கொண்டு பொதுமக்களிடம் யாசகம் கேட்டனர். குழந்தைகள் அனைத்தும் தூங்கியபடி இருந்த நிலையில் மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. சுமார் 70க்கும் அதிகமான பெண்கள் குழந்தைகளை வைத்து கொண்டு அம்மா மண்டபத்தில் யாசகம் கேட்டதால் தான் இந்த சந்தேகம் வலுத்து போனது.
இதையடுத்து உடனடியாக பொதுமக்கள் விசாரிக்க தொடங்கினர். பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் தாங்கள் வைத்திருந்த குழந்தைகளுடன் அங்கிருந்து வேகமாக ஓடினர். இதுபற்றி விசாரித்தபோது தான் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ஸ்ரீரங்கத்தில் ஆடி அமாவாசையையொட்டி கூடும் மக்களிடம் பிச்சை எடுக்கும் நோக்கத்தில் சில பெண்கள் மற்றவர்களின் பச்சிளம் குழந்தையை ரூ.500 கொடுத்து வாடகைக்கு எடுத்ததாக புகார்கள் எழுந்தது. இந்த விஷயம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மாவட்ட கலெ க்டருக்கும், குழந்தைகள் நலபாதுகாப்பு துறைக்கும் புகார்கள் பறந்தது. இதையடுத்து போலீசார், அதிகாரிகள் விரைந்து வந்து 8 குழந்தைகளை மீட்டனர். மேலும் பல பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் தான் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் கூறுகையில், ‛‛சம்பவ இடத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு ஆய்வு செய்து விசாரித்தது. அப்போது சில பெண்கள் தங்களின் குழந்தைகளை வைத்து யாசகம் கேட்டுள்ளனர். அதேவேளையில் மற்றவர்கள் பணம் கொடுத்து குழந்தையை வாடகைக்கு எடுத்து வந்தார்களா? என விசாரித்து வருகிறோம். இதில் உண்மை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications