பட்டப்பகலில் தூத்துக்குடி விஏஓ வெட்டி படுகொலை.. மணல் மாபியாக்கள் வெறிச்செயல்! 4 தனிப்படைகள் அமைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மணல் கொள்ளை குறித்து புகார் கூறியதால் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை அடுத்த சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (45). இவர் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் 12.30 மணிக்கு தனது அலுவலகத்தில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லூர்துவை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சரிந்து விழுந்ததும் அந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். உயிருக்கு போராடிய அவரை சக ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்றைய தினம் பிற்பகல் 2.40 மணிக்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு போன்சிட்டாள் என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். விஏஓவை அலுவலகத்தினுள் புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஏஓ லூர்து பிரான்சிஸ் நேர்மையானவர், துணிச்சல் மிக்கவர் என்றும் இதற்கு முன்பு கூட ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றினார் என்றும் அப்போது அவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர் என்றும் ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார். மேலும் தற்போது மணல் திருட்டு தொடர்பாக காவல் துறையில் அவர் புகார் அளித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

முறப்பாடு பகுதி தாமிரபரணி ஆற்றில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (45) உள்ளிட்டோர் மணல் கடத்தலில் ஈடுபட்டதை அறிந்த லூர்து பிரான்சிஸ் கடந்த 13 ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் ராமசுப்பிரமணியனும் அவரது உறவினர் மாரிமுத்துவும் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராமசுப்பிரமணியனை முறப்பநாடு போலீஸார் கைது செய்தனர். மாரிமுத்துவை போலீஸார் தேடி வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ரூ 1 கோடி நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். லூர்து பிரான்சிஸை கொலை செய்த நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டபகலில் விஏஓ அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications