5 பேர் பலி.. சாத்தான்குளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்த கிணற்றில் 45 சவரன் தங்க நகை மீட்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோரம் உள்ள கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் கிணற்றுக்குள் தங்க நகைகள் விழுந்ததால் தண்ணீரை வெளியேற்றி 45 சவரன் நகைகள் இன்று மீட்கப்பட்டது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மோசஸ். இவர் தனது மனைவி வசந்தா மற்றும் குடும்பத்துடன் கோவையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள வெள்ளாளன்விளைக்கு நேற்று ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். ஒன்றரை வயது குழந்தை உள்பட மொத்தம் 8 பேர் காரில் பயணித்தனர்.

இவர்கள் சென்ற ஆம்னி வேன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே உள்ள மீரான்குளம் - சிந்தாமணி சாலையில் பயணித்தது.அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையேராம் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
இதில் ஆம்னி வேன் கிணற்றுக்குள் மூழ்கியது. அந்த வேனில் இருந்த ஷைனி கிருபாகரன், ஜெனிட்டா, எஸ்தர் ஹெர்சோம் ஆகிய மூவரும் வெளியே வந்தனர். மற்ற 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். 3 மணிநேர மீட்பு பணி நடந்தாலும் 5 பேரையும் காப்பற்ற முடியவில்லை.
அவர்கள் 5 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. ரவி கோயில்பிச்சை (வயது 60), அவரது மனைவி ஹெச்சியா கிருபாகரன் (49), மோசஸ் (50), அவரது மனைவி வசந்தா (49), ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இறந்தவர்களின் உடல்களுக்கு கனிமொழி எம்பி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவத்தில் தங்க நகைகள் கிணற்றுக்குள் விழுந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் மூலம் கிணற்றில் கிடந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இறுதியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் இணைந்து கிணற்றில் கிடந்த தங்க செயின், மோதிரம் உள்பட பல நகைகளை மீட்டனர். இந்த நகைகள் மொத்தம் 45 சவரன் இருக்கும் என்று தெரிவித்தனர். அதன்பிறகு இந்த நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications