வருத்தத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்.. மீனவருக்கு பொறுப்பு? தூத்துக்குடியில் ஆட்டத்தை மாற்றும் திமுக!
தூத்துக்குடி: தவெக ஆட்சி அமைந்த பின் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசமாக செயல்பட்ட நிலையில், திமுக மறுசீரமைப்பு பணிகள் தொடங்கிய பின் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். அனிதா ராதாகிருஷ்ணனின் அமைதி தொடர்பாக விசாரித்த போது பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தவெக ஆட்சி அமைத்த பின் திமுக முகாமில் இருந்து முதல் நபராக கைது செய்யப்பட்டவர் அனிதா ராதாகிருஷ்ணன். தவெகவையும், விஜய்யையும் கடுமையாக சாடி வந்த அனிதா ராதாகிருஷ்ணன், அம்பை தொகுதி தேர்தல் பணியை ஸ்டாலினிடம் கேட்டு பெற்று கொண்டார். ஆனால் திடீரென திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பின் அனிதா ராதாகிருஷ்ணனின் சத்தத்தையே காணோம்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட அனிதா ராதாகிருஷ்ணன் வரவில்லை. அதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் தொகுதி பக்கம் கூட வராமல், தூத்துக்குடியிலேயே முகாமிட்டிருக்கிறார். இதற்கு திமுகவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதே காரணம் என்று கூறுகின்றனர். அனிதா ராதாகிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக நிச்சயமாக மாவட்டச் செயலாளர் பதவி பறிபோய்விடும்.
அவர் அதிகம் எதிர்பார்த்த திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். இதுதொடர்பாக ஸ்டாலின் உட்பட யாரும் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் வருத்தத்தில் இருக்கிறார் என்று உடன்பிறப்புகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை தனது ஆதரவாளருக்கு பெற்றுக் கொடுக்க தீவிரமாக இருந்தார்.
ஆனால் கனிமொழியின் தலையீடு காரணமாக அதற்கும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஏனென்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 1.5 லட்சம் மீனவர்கள் இருக்கின்றனர். திமுகவில் மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இதனால் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக மீனவர் ஒருவரை கொண்டு வர திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது.
கனிமொழியின் பரிந்துரை பெயரிலேயே இந்த முடிவும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தவெக ஏற்கனவே மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத்துக்கு அமைச்சர் பொறுப்பு அளித்துள்ளது. இதனை சரி கட்டவே திமுக இந்த நகர்வை மேற்கொள்ள உள்ளது. இதனால் தனது செல்வாக்கு குறையும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் வருத்தத்தில் உள்ளார். ஆனால் திமுக தலைமை சீனியர்கள் மொத்தமாக ஓரம்கட்டும் முடிவில் இல்லை என்பதால், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கவுரமான பதவியை கொடுக்கும் என்றும் சொல்கின்றனர்.


Click it and Unblock the Notifications
