திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: 10 லட்சம் பக்தர்களுக்கு பாதுகாப்பு - கடலில் சிறப்பு ஏற்பாடுகள்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (ஜூலை 7, 2025) நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோவில் முன்புள்ள கடலில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவில் நிர்வாகம், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

குடமுழுக்கு நாளில் கோபுரத்தில் நடைபெறும் நிகழ்வை நேரடியாகக் காண, திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் 50,000 பக்தர்கள் வரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கடற்கரைப் பாதுகாப்புப் பணியில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கடலில் பக்தர்கள் யாரேனும் சிக்கிக்கொண்டால், அவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஒத்திகை இன்று (ஜூலை 6, 2025) கோவில் முன்புள்ள கடலில் நடைபெற்றது. பத்துக்கும் மேற்பட்ட படகுகள் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழுவினர்களும், ஆழ்கடலில் பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் லைஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் படகுகளில் தயார் நிலையில் இருந்தனர்.
இவர்கள் கடலில் குறிப்பிட்ட எல்லை வரை செல்லக்கூடிய இடங்களிலும், அதற்கும் மேலான இடங்களிலும் சென்று பக்தர்கள் யாரும் கடலில் சிக்கினால் அவர்களை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பயிற்சி செய்தனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள தீயணைப்பு அலுவலர் கணேசன் மற்றும் உதவித் தீயணைப்பு அலுவலர் கோமதி அமுதா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் கடல் பகுதிகளை நேரில் பார்வையிட்டு இந்த ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும், பக்தர்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பது குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications