'சாபக்கேடு..' ஆன்லைன் ரம்மி குறித்து ஆளுநர் மீது துரை வைகோ அட்டாக்! முதலில் கடமையை செய்யுங்க!
தூத்துக்குடி: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது 'சாபக்கேடு' என்று மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தை இன்று பார்வையிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் துரை வைகோ.
பின்னர் செய்தியளர்களுக்கு பேட்டியளித்த அசெய்தியாளர்களுக்கு வர் இந்த நினைவரங்கம் அமைத்து கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், இது அமைய காரணமாக இருந்த திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார்.

சாபக்கேடு
மேலும் அவர் பேசுகையில், "ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 30ஐ கடந்திருக்கிறது. சட்டப் பேரவையில் இந்த சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவரின் சந்தேகங்களுக்கு சட்டத்துறை அமைச்சர் பதில் அளித்திருக்கிறார். இருந்தபோதிலும் தற்போது வரை அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது ஒரு பெரிய 'சாபக்கேடு'. ஆளுநர் மக்களுக்காக செயல்பட வேண்டும். 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் தற்போது நிலுவையில் இருக்கின்றன. எனவே ஆளுநர் தனது கடமையை முதலில் செய்ய வேண்டும்.

ஜனநாயக கேடு
அதைவிடுத்து தனிப்பட்ட ஒரு இயக்கத்தின் சார்பாகவும், ஒரு சித்தாந்தத்தின் சார்பாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து பணி செய்வது என்பது ஆரோக்கியமானது அல்ல. ஜனநாயக நாட்டில் இப்படி செயல்படுவது ஜனநாயக கேடு. இந்த கால தாமதத்திற்கு காரணம் சொல்லும் அண்ணாமலை, தமிழ்நாடு அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நியாயமான குற்றச்சாட்டுகளை சொல்வதில் தவறு கிடையாது. ஆனால் அவர் சொல்வது விமர்சனம் அல்ல. அது அவதூறு. அண்ணாமலை நன்கு படித்தவர். எனவே பொறுப்புள்ள அரசியல் கட்சித் தலைவராக செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பேட்டி
முன்னதாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஆளுநர் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்திருந்தார். இது குறித்து அவர் கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆன்லைன் ரம்பி போன்ற சூதாட்டங்களை எல்லா இணையவழி சூதாட்டங்களை தடை செய்வதற்காகவும், ஒழுங்குபடுத்துவதற்காகவும் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பதில் சொல்லி இருந்தோம். இது தொடர்பாக அரைமணி நேரம் விளக்கங்களை கொடுத்திருக்கிறோம்" என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், இந்த மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தார்.

காலாவதி
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அன்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். இதனையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டு அதே மாதம் 28ஆம் தேதியன்று ஆளுநர் ஆர்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதா குறித்து எந்தவித பதிலும் ஆளுநர் தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை. மறுபுறம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு கடந்த 26ம் தேதி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டம் நவம்பர் 27ஆம் தேதியன்று காலாவதியானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications