பிரபல ஓட்டலின் ஃபிரிட்ஜை திறந்து பார்த்து நின்ற ஆபீசர்.. "இதுவே ரொம்ப மேஜர்".. திணறுது தூத்துக்குடி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிரபல ஓட்டலில் நடந்த சம்பவத்தையடுத்து, அதிகாரிகள் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை தமிழக மக்களுக்காக விடுத்துள்ளார்கள்.
தூத்துக்குடியை சேர்ந்த லிவிங்ஸ்டா என்பவர், எட்டையபுரம் சாலையில், "அனிபா பிரியாணி" என்ற ரெஸ்ட்டாரெண்ட்டை நடத்தி வருகிறார்.. இந்த ஓட்டல் பிரியாணிக்கென்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறதாம்.

அதிரடி நடவடிக்கை: இந்த ஓட்டலில், நேற்றைய தினம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக இந்த ஓட்டலுக்குள் சோதனை செய்தார்கள்..
அப்போது, ஃபிரிட்ஜ்ஜூக்குள் நேற்று சமைத்த உணவுகள் போக, பழைய உணவுகளும் வைக்கப்பட்டிருந்தன.. அந்தவகையில், 3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், ஒன்றரை கிலோ மீன் வகைகள், 3 கிலோ சாதம், 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், இரண்டரை கிலோ பிரட் அல்வா, நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மாவு, 2 கிலோ அரிசி மாவு, மைதா மாவு, 3 லிட்டர் தேதி குறிப்பிடாத சோயா சாஸ் போன்றவை எல்லாமே ஒரே ஃபிரிட்ஜ்ஜூக்குள் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அரண்டு போனார்கள்.

அதிகாரிகள்: மேலும், இந்த ஓட்டலுக்கு, முறையான லைசென்ஸ் பெறாமல் உள்ளதை கண்டு அதற்கு மேல் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ஓட்டலை தற்காலிகமாக பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட உணவுகளையும், மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொட்டி அழித்தனர்.
இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் இச்சம்பவம் குறித்து கூறும்போது, "அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில், உரிமம் / பதிவு சான்றிதழ் பெற வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.
லேபிள் விவரங்கள்: பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் விபரச் சீட்டில், தயாரிப்பு (அல்லது) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளிட்ட லேபிள் விபரங்கள் குறிப்பிட்டிருக்கின்றதா என்பதை அறிய வேண்டும். காலாவதியான உணவுப் பொருட்களை பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது.

விற்பனை: உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணமும், தூசிகள் விழாதவாறும் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
தேதி முக்கியம்: முதல் நாள் தயாரித்த உணவுப் பொருட்களில் மீதமானவற்றை பிரிட்ஜில் வைத்து, அடுத்த நாள் நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடாது. மாறாக அதனை அப்புறப்படுத்தி, பதிவேட்டில் விபரங்கள் பராமரிக்க வேண்டும். முன் தயாரிப்பு செய்த அசைவ உணவுப் பொருட்கள் வைக்கப்பட்ட பாத்திரத்தில், முன்தயாரிப்பு செய்த நாள் மற்றும் நேரம் குறிப்பிட வேண்டும்.
உணவகங்களில் உள்ள பணியாளர்களுக்கு, தொற்று நோய்த் தாக்கமற்றவர் என்பதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தலைத் தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு தடுப்பூசி உள்ளிட்ட உணவின் மூலமாகப் பரவக்கூடிய நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும்.
ரகசியம்: நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணுக்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்" என்றார்.
பராமரிப்பு: முன்னதாக, அந்த ஓட்டலுக்கு சென்று அதிகாரிகள் சோதனை செய்தபோது, கிச்சன் முழுக்க சரியாக சுத்தம் செய்யாமலும், முறையாக பராமரிப்பு இல்லாமலும், சுகாதாரமற்றும் இருந்ததாம். பார்த்து அதிர்ந்தனர்.. அதாவது, கிச்சனின் சுவறறில் சிலந்தி வலைகள் தொங்கி கொண்டிருந்ததாம்.. கிச்சனிலேயே வாசற்படியிலேயே சிமெண்ட் மூட்டைகள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். அதிலிருந்து கிளம்பிய தூசுகள் கிச்சன் உணவுகளில் படிந்திருந்ததாம்.












Click it and Unblock the Notifications