ஒரே பகுதியில் தேர்தலை புறக்கணித்த 4 கிராம மக்கள்! இலங்கை தமிழர்களுக்கு எதிர்ப்பு! பரபர தூத்துக்குடி
தூத்துக்குடி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 நடைபெற்று வரும் நிலையில், விளாத்திகுளம் தொகுதியில் நான்கு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், வீடுகளுக்கு கருப்புக் கொடி கட்டி வாக்குச்சாவடிகளுக்கு செல்லாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எட்டயபுரம் அருகே உள்ள குளத்துள்வாய்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள குமாரகிரி, சோத்துநாயக்கன்பட்டி, அம்மாமடம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராமங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் கிராம மக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு
குறிப்பாக விவசாய நிலங்களுக்கு செல்லும் வழிகளில் பிரச்சனை உருவாகி, அடிக்கடி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், அப்பகுதியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் கூறி, குளத்துள்வாய்பட்டியில் ஒரு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிராம மக்கள் முன்வைத்துள்ளனர். மேலும், முகாமில் வசிப்போர் முன்பு பயன்படுத்திய கட்டிடங்களை விவசாய பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.
கருப்புக்கொடி போராட்டம்
இந்த கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் எந்தத் தீர்வும் கிடைக்காததால், கிராம மக்கள் சில நாட்களுக்கு முன்பே கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். தேர்தல் நாளில் வாக்களிக்க மாட்டோம் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த அவர்கள், இன்று அதையே நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
கிராம மக்கள் போராட்டம்
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியபோதும், குளத்துள்வாய்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வராததால் அந்த மையம் வெறிச்சோடியபடி காணப்பட்டது. மொத்தம் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் உள்ள இந்த வாக்குச்சாவடியில், காலை முதல் பல மணி நேரம் கடந்தபோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
வாக்குச்சாவடிக்கு செல்லாமல், வீடுகளின் வாசலிலேயே கருப்புக் கொடி கட்டி அமர்ந்திருந்த கிராம மக்கள், "எங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காத வரை தேர்தலில் பங்கேற்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளனர். மேலும், வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கை தமிழர் முகாம்
இலங்கை தமிழர் முகாம் காரணமாக தேர்தல் புறக்கணிப்பு என அப்பகுதியில் நடந்து வரும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல் நடைபெறும் நேரத்தில் கிராம மக்கள் ஒருமித்தமாக தேர்தலை புறக்கணித்தது அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய்த் துறை மற்றும் காவல்துறையின் அலட்சியம் காரணமாகவே இந்த பிரச்சினை பெரிதாகிவிட்டதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை வேறு இடத்திற்கு மாற்றுவது மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications