குலசை தசரா விழா! சிம்ம வாகனத்தில் சூரனை வதம் செய்த முத்தாரம்மன்! காலை முதல் அபிஷேகம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா கொண்டாட்டத்தின் கடைசி நாளான சூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே அம்மன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் இந்த தசரா திருவிழா நடைபெறும். மைசூர் தசராவுக்கு அடுத்தது முத்தாரம்மன் கோயில் தசராதான் பிரசித்தி பெற்றது.

இந்த திருவிழாவையொட்டி 23 ஆம் தேதி, முதல் நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2ஆம் நாள் இரவில் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்திலும் 3ஆம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும் 4ஆம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும் 5ஆம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6ஆம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும் 7ஆம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும் 8ஆம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும் 9ஆம் நாள் இரவு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து 10 ஆம் நாளான நள்ளிரவு 12 மணிக்கு மகிஷனை சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது.
இந்த தசரா விழாவை காண கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த விழாவில் காளி, அம்மன், சிவன், பார்வதி, முருகன், அரக்கர், குரங்கு, தாடகை, குறவன்- குறத்தி போன்று வேடமிட்டு ஊர்வலமாக செல்வது வழக்கம்.
இந்த விழாவின் கடைசி நாளான நேற்று மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் சூலாயுதத்துடன் எழுந்தருளி மகிஷாசுரனை துரத்தி சென்று வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண பலர் குலசேகரன்பட்டினத்தில் ஏராளமானோர் குவிந்தனர். பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளினார். அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மன் திருத்தேரில் பவனி வரும் விழா நிகழ்ந்தது. இன்று காலை முதல் முத்தாரம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications