How is Ajitha?: தவெக அஜிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம்! ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றம்?
தூத்துக்குடி: விஜய் தனக்கு கட்சியில் பதவி தரவில்லை என்பதற்காக 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி அஜிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் அஜிதா இன்று ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், எஞ்சிய மாவட்டங்களுக்கான செயலாளர்கள் அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடந்த இந்த முக்கிய நிகழ்வில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று அஜிதா ஆக்னல் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தார்.

இந்த நிலையில், அஜிதாவுக்கு கிடைத்த தகவலின்படியே அந்த பதவிக்கு சாமுவேல் நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் விஜய்யை நேரில் சந்தித்து முறையிட முயன்றார். பவுன்ஸர்கள் அனுமதிக்காததால், நீண்ட காலமாக உழைத்த தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி, கண்ணீர் மல்க விஜய்யின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
இச்சம்பவத்திற்குப் பிறகு தூத்துக்குடி திரும்பிய அஜிதா, கடந்த மூன்று நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்தார். சரியாக உணவு உட்கொள்ளாமல் இருந்த அவர், நேற்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரது கணவர் கூறுகையில், "காலை எழுந்தபோது, சிலர் தன்னை திமுகவின் கைக்கூலி என்று விமர்சிப்பதாக கூறி அஜிதா மிகவும் வருத்தப்பட்டார். அந்த வேதனையில் வீட்டில் இருந்த சுமார் 15 தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கிவிட்டார்" என்று தெரிவித்தார்.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அஜிதா, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏற்கெனவே மன உளைச்சல் காரணமாக இரத்த அழுத்தம் குறைந்திருந்த நிலையில், தற்போது தூக்க மாத்திரைகளையும் உட்கொண்டதால் அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இன்றும் இரண்டாவது நாளாக அஜிதாவுக்கு ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அஜிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அவர் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல் நெருங்கும் வேளையில், தவெகவில் நிலவும் உட்கட்சிப் பூசலும், நிர்வாகிகள் மத்தியில் இருக்கும் அதிருப்தியும் விஜய்க்கு ஒரு சவாலாக மாறி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூட ஒரு நிர்வாகி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விஜய் இனி என்ன முடிவெடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications