தூத்துக்குடியை இனி அசைச்சுக்கவே முடியாதுல.. குலசேகரப்பட்டினத்தில் கோலாகலம்! மாஸ் சம்பவம் செய்த இஸ்ரோ
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை உடன் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து மற்றொரு இடத்தில் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ திட்டமிட்டது.

பல்வேறு கட்ட ஆய்வுகளின் முடிவில் ராக்கெட் ஏவ சிறந்த இடம் மற்றும் எரிபொருள் என பல்வேறு வழிகளில் மிகச்சிறந்த இடமாகத் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத் திட்டம் வருவதன் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி,வேலை வாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்பட்டது. குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதன் மூலம் எரிபொருள் செலவினங்கள் மற்றும் விண்வெளியில் இலக்கை ராக்கெட் அடைவதற்கான நேரம் குறைவு உள்பட என்னென்ன நன்மைகள் இருக்கும் என்பதைத் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து காரணிகளையும் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் இஸ்ரோ அறிக்கை கொடுத்தது.
பொதுவாக ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்திருக்க வேண்டும். தற்போது ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும் நிலையில் அதன் பாகங்கள் இலங்கை மீது விழுந்து விடக்கூடாது என்பதால் முதலில் கிழக்கு நோக்கி ஏவப்படுகிறது. அதற்கு பிறகு தென் துருவம் நோக்கி திருப்பப்படும். இந்த முறையில் ஏவப்படுவதால் அதிக எரிபொருள் செலவாகிறது.
தற்போது குலசேகரப்பட்டினம் சுமார் எட்டு டிகிரி வடக்கில் உள்ளதால் ராக்கெட் ஏவும்போது ராக்கெட்டுகள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இதனால் எரிபொருளும் மிச்சமாகும். மேலும் அங்கு 30 கிலோமீட்டர் குறைவான வேகத்தில் காற்று இருக்கும். புயல் மழை தாக்கம் குறைவாக இருப்பதால் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தின் படுக்காபத்து, பள்ளக்குறிச்சி, மத்தவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,233 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி குலசேகரப்பட்டினம் புதிய ராக்கெட் ஏவு தளத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு சார்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை அடுத்து புதிய ராக்கெட் தளம் அமைப்பதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. இந்த நிலையில் குலசேகரப்பட்டினத்தில் கட்டுமான பணிகள் தொடங்கி இருக்கிறது. இன்று பூமி பூஜை நடைபெற்ற நிலையில் இஸ்ரோவின் இயக்குனர்கள், மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக பணிகள் நிறைவடையும் என கூறியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் தயார் செய்யப்பட்டதும் உலக நாடுகளில் இருந்தும் தனியார் நிறுவனங்களில் இருந்தும் சிறிய வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ தங்களது ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் குலசேகரபட்டினம் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பொருளாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications