அன்று வீடு தேடி வந்தது விஜய்தான்! தவெகவில் இணைந்த தூத்துக்குடி ஸ்னோலின் தாய்!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின் தாயார் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். நடிகர் விஜய் மூலம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றம் நடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அதில் இளம் பெண் ஸ்னோலின் பலியானார். அந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அவரது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக இரவு 12 மணிக்கு நடிகர் விஜய், தூத்துக்குடிக்குச் சென்றார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின.

இப்போது உயிரிழந்த ஸ்னோலின் அம்மா வனிதா தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் வீட்டில் தவெக கொடி பறக்கிறது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டுக்கு வனிதா வந்து சென்றுள்ளார். விஜய் கட்சியில் இணைந்தது ஏன்? அதற்கான காரணம்? என்ன? அது தொடர்பாக வனிதா அளித்துள்ள பேட்டியில், "இப்படி ஒரு கலவரம் நடக்கும் என்றோ, துப்பாக்கிச் சூடு செய்வார்கள் என்றோ நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களாகப் போராட்டம் நடந்து வந்தது.

கடைசி நான் கலெக்டரை பார்த்து மனு கொடுப்பதற்காக ஊர்வலமாகப் போனோம். நாங்கள் சொத்து சுகம் கேட்டுப் போராடவில்லை. நிலத்தடி நீருக்காக, சுவாசிக்கின்ற காற்றுக்காக வேண்டி தான் உரிமைக் கேட்டுப் போனோம். நாங்கள் ஆரோக்கியமாக வாழ நல்ல சுற்றுச்சூழல் வேண்டும். அதற்காகத்தான் போராடினோம்.
நீதி, நியாயம் எங்கே கிடைக்கும் என்று நம்பிப் போனோமோ அங்கேயே எங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைக்கவே இல்லை. மனு கொடுக்க ஊரே திரண்டு போனது. எனவே நானும் என் மகளும் போனோம். பாலம் தாண்டிய பிறகு என் மகளைக் கூட்டத்தில் காணவில்லை. தேடித் தேடிப் பார்த்து அசந்து போனேன். என் இருப்பில் கை குழந்தை வேறு இருந்தது. பசியில் குழந்தை தவித்ததால் கலெக்டர் ஆபீஸ் பக்கம் போய் கடையில் பால், பிஸ்கெட் வாங்கிக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். மகள் வரவில்லை.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. நான் வீட்டுக்கு புறப்பட்டு வரும் வழியில் ஆம்புலன்ஸ் போனது. அதில் என் மகள் அடிபட்டு தூக்கிப் போகிறார்கள் என்பது தெரியாமல் வீடு வந்தேன். அதற்குள் என் மகன் என்னைத் தேடி வந்துவிட்டான். அவன் போய் தேடிப் பார்த்துவிட்டு, வந்து மகள் அடிப்பட்டதைச் சொன்னான்.
துப்பாக்கிச் சூட்டில் அவள் வாயில் குண்டடிபட்டு 13நாட்கள் சிகிச்சையிலிருந்தாள். போய் பார்த்து வந்தவர்கள் வாய் இல்லை, பல் இல்லை, நாக்கு இல்லை என என்னென்னவோ சொன்னார்கள். மனம் தாங்காமல் நான் போய் பார்க்கவே இல்லை. நான் பெற்ற முகம் வேறு. வளர்த்த முகம் வேறு. அவளை அலங்கோலமாகப் பார்க்க மனம் வரவில்லை. ஆகவே போய் பார்க்கவில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசிய வனிதா, "என் மகளை 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். அவள் இறந்து அடக்கம் செய்த பிறகு, 15 ஆவது நாள் விஜய் வீட்டுக்கு வந்தார். எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமல் இரவு 11:30க்கு மேல் வந்தார். தெருவில் யாருமே இல்லை. நான் மட்டும்தான் என் மகளை நினைத்தே வாசலில் உட்கார்ந்திருந்தேன். முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டு வந்தார். நடு ராத்திரியில் வந்துள்ளேன் என்று சொல்லி மன்னிப்பு கேட்டார். அன்று ஆட்சியிலிருந்தது அதிமுக. அவர்கள் யாரும் வந்து அனுதாபம் சொல்லவில்லை. டிவியில் பார்த்துத்தான் துப்பாக்கிச் சூட்டைத் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி சொன்னார். அன்று விஜய் அரசியலிலேயே கிடையாது.
துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்கள் எல்லாம் நகர்ந்து கொண்டார்கள். யாருமே துக்கம் விசாரிக்க வரவில்லை. இந்தச் சம்பவத்திற்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத விஜய், 'சாரி அம்மா மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று என் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னார். அவருக்கு இது அவசியமே இல்லை. அவர் சாரி எனச் சொல்வது எவ்வளவு பெரிய வார்த்தை? கால் மணி நேரம் வீட்டுத் தரையில் உட்கார்ந்திருந்தார்.
விஜய் ஒரு லட்சம் செக் கொடுத்தார். அதைக் கூட போட்டோ எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். அவர் மனம் வேறு யாருக்கும் இல்லை. அதனால்தான் இப்போது விஜய் கட்சியில் இணைந்து இருக்கிறேன். தவெக மாநாட்டுக்குக் கூடப் போனேன். அதற்கே ஊரில் சிலர் திட்டினார்கள். மகளைப் பறி கொடுத்துவிட்டு இருக்கும் போது தைரியமாக மாநாட்டுக்குப் போக வேண்டுமா என்றார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்திற்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. வெறுமனே நஷ்ட ஈடு கொடுத்துவிட்டால் போதுமா? உயிரின் மதிப்பு அவ்வளவுதானா? என் மகளுக்கு ஒரு நீதி வேண்டும். எனவே விஜய் கட்சிக்குச் சென்றுள்ளேன்" என்கிறார்.












Click it and Unblock the Notifications