கனிமொழி தத்தெடுத்த கிராமம்! உதவிக்கரம் நீட்டிய கார்ப்பரேட்! CSR நிதியில் புது கான்கிரீட் வீடுகள்!
தூத்துக்குடி: சிதலமடைந்த காலனி வீடுகளுக்கு மாற்றாக புது கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை, கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் உதவி மூலம் செய்துக் கொடுத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை கனிமொழி எம்.பி. தத்தெடுத்துள்ளார். அந்த ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் என்ற கிராமத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு கட்டப்பட்ட காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும் சிதலமடைந்திருந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக் வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து NTT Global Data Centers & Cloud Infrastructure India Private Limited, Chennai என்ற தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்துவிட்டு, புது வீடுகள் கட்டுவதற்கு கனிமொழி ஏற்பாடு செய்தார். கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணிகள் நிறைவுபெற்ற முதல் 9 வீடுகளை மட்டும் கனிமொழி திறந்து வைத்து பயனாளர்களுக்கு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது; ''இந்த பகுதிக்கு பேருந்து நிலையம் திறக்க வந்து போது, இங்குள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்து இருக்கிறது, நீங்கள் வந்து பார்க்கவேண்டும் என்று என்னை அழைத்தனர். வீடுகளைப் பார்த்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நானும், அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆலோசித்து வீடுகளை சீரமைக்க பல முயற்சிகளைச் செய்து பார்த்தோம். ஆனால் கட்டிமுடித்த வீட்டிற்கு,சரி செய்து தர எந்த திட்டமும் கிடையாது என்று தான் பதில் வந்தது.''
''இதையடுத்து ஒரு தனியார் நிறுவனத்திடம் பேசி, அவர்களுடைய CSR தொகை மூலம் வீடுகளைக் கட்டி முடிக்க முடிவு செய்தோம். தனியார் நிறுவனத்திடம் பேசி, பண உதவி பெற்று, வீடுகளைக் கட்டி முடித்துவிட்டோம். பணிகள் நிறைவுபெற்ற 9 வீடுகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்திருக்கிறோம். இன்னும் 11 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் இன்று துவங்கிவிட்டது. விரைவில் அதுவும் கட்டிமுடிக்கப்பட்டு, திறந்துவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications