Kulasai Dasara: குலசை தசரா கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலம்.. நாளை சூரசம்ஹாரம்! குவிய தொடங்கிய பக்தர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி குலசையில் தசரா திருவிழா (Kulasai Dasara) கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குலசைக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் அங்கு 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசையில்தான் தசரா திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 23ஆம் தேதி குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசை தசரா திருவிழா
தசரா திருவிழா நாளில் 10 நாட்களும் அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பக்தர்கள் அருள் பாலிப்பார். 7ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அபிஷேக ஆராதனை
இன்று 9ஆம் திருவிழா ஆகும். இன்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (அக் 2) சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷாசூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார். நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேக ஆராதனை நடைபெறும்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. தசரா திருவிழா சூரசம்ஹாரத்தை ஒட்டி நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரள்வார்கள் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தசரா திருவிழாவையொட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களில் குழுக்கள் அமைத்து பல்வேறு வேடங்கள் தரித்து நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவார்கள்.
கலைநிகழ்ச்சிகள்
திருகாப்பு கட்டிய தசரா குழுவினர் காளி, முருகன், விநாயகர், சிவன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிப்பார்கள். கலை நிகழ்ச்சிகளும் குழுக்கள் சார்பில் நடைபெறுகிறது. உடன்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஞானியார் குடியிருப்பு, தாண்டவன்காடு, சிறுநாடார் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு தசரா குழுவினர் சார்பில் மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், 'டிஸ்கோ டான்ஸ்' போன்ற கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.












Click it and Unblock the Notifications