தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே.. கூலிப்படையால் வாலிபர் வெட்டி கொலை.. கொலையாளிகளில் இருவர் சிறுவர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவர்கள் அடங்கிய கூலிப்படையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
தூத்துக்குடி பிரைண்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (29). பெயிண்டராக வேலை செய்யும் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு தனது உறவினர்களை பஸ் ஏற்றி விடுவதற்காக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு சரவணக்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பேருந்து நிலையம் அருகே இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தகராறு செய்தது. அப்போது இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்படவே, கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்து அந்த கும்பல் சரவணக்குமாரை சரமாரியாக வெட்டியது.
இதில் சம்பவ இடத்திலேயே சரவணக்குமார் உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் சாவகாசமாக மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றது. நூற்றுக்கணக்கான மக்கள் இருக்கும் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூலிப்படையில் சிறுவர்கள்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து சரவணக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் இச்சம்பவம் குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், சரவணக்குமார் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதை தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை போலீஸார் தேடி வந்தனர். இதில் இந்தக் கொலையில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கூலிப்படையை போலீஸார் கைது செய்தனர். அதில் 18 வயதுக்கும் குறைவான இரண்டு சிறுவர்களும் இருந்தனர்.

கொலை பயம்
விசாரணையில், (அந்த சிறுவர்களை தவிர்த்து மற்றவர்களின் பெயர்) மனோ, துரைசாமி மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்தது. மனோவுக்கும், சரவணக்குமாருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணக்குமார் தன்னை கொலை செய்துவிடக் கூடும் என்பதால் தான் முந்திக்கொண்டு அவரை கொலை செய்துவிட்டதாக போலீஸாரிடம் மனோ வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இதற்காக துரைசாமி, கார்த்திக் மற்றும் இரண்டு சிறுவர்களுக்கு பணம் கொடுத்து சரவணக்குமாரை தீர்த்துக் கட்டியதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் 2 சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகரிக்கும் கூலிப்படை சிறுவர்கள்
தமிழகத்தில் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மைனராக கருதப்படுவதால் இவர்கள் குற்றங்களில் ஈடுபட்டால் இவர்களை விசாரிக்க தனி நடைமுறை இருக்கிறது. இவர்களுக்கென தனி நீதிமன்றம், காப்பகமும் உள்ளது. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இதுபோன்ற சிறார்கள் கைது செய்யப்படும் போது காவல்துறையும் இவர்களிடம் கடினமாக நடந்துகொள்ளக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதுபோன்ற சலுகைகள் காரணமாக சமீபகாலமாக இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலும் இதுபோன்ற சிறுவர்களை கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட வைக்கின்றனர்.

இளம் குற்றவாளிகள்
தமிழகத்தில் இது போன்ற இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இளம் குற்றவாளிகளின் வயது வரம்பை 16-ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையில் தான் உள்ளது. சிறுவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வரும் சூழலில், இதனை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications