ஆதிச்சநல்லூரில் நீங்களும் வாங்களேனு அழைத்த நிர்மலா சீதாராமன்! சிரித்தபடியே சென்ற கனிமொழி! நாகரீகம்!
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டிய போது கனிமொழி எம்பியை அழைத்து தனது அருகே நிற்க வைத்துக் கொண்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் சார்பில் தாமிரபரணி நதிக்கரையில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்கியாட்சியகம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அகழாய்வு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், சங்ககாலத்தினர் வாழ்ந்த பகுதிகள், வெண்கல பொருட்கள் உள்ளிட்டவை அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது எடுக்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்து காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் வைப்பதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். 5 ஏக்கர் நிலத்தில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமையவுள்ளது.
இந்த விழாவுக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்த நிகழ்வின் முடிவில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆதிச்சநல்லூரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைகிறது.
இந்த இடத்தில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெற்றது தெரியவந்தது. மனிதர்களை புதைக்கும் இடங்களும் இங்கு இருந்துள்ளன. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 3500 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்ட நெல், திணை, தங்கம் ஆகியவற்றை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள தொல் பொருட்களையும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கவுள்ளோம். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையுமின்றி போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும் என தெரிவித்திருந்தார். இந்த விழாவில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.
அருங்காட்சியக பணிகளை நிர்மலா சீதாராமன் பார்வையிட்ட போது பின்னால் வந்து கொண்டிருந்த கனிமொழி எம்பியை முன்னாடி அழைத்து நீங்களும் வாங்க என கூப்பிட்டு நிர்மலா தனது அருகே வைத்துக் கொண்டார். பின்னர் அருங்காட்சியகம் குறித்து கனிமொழியிடமும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அரசியல் வேறு நாகரீகம் வேறு என்பதை நிரூபித்து காட்டிவிட்டனர். கனிமொழி குறித்து நிர்மலா, அவர் குறித்து கனிமொழியும் விமர்சனங்கள் முன்பு முன் வைத்திருக்கலாம். ஆனால் அந்த தொகுதியின் எம்பி என்ற முறையில் அவருக்கு நிர்மலா மரியாதை செய்தார். அதை கனிமொழி எம்பியும் மறுக்காமல் ஏற்றார்.

இந்த விழா குறித்து கனிமொழி எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தொல் தமிழர் நாகரிகத்தின் சான்றாதாரமாக விளங்கும் ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் துறை சார்பில் அமையவுள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டேன்.
ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. @nsitharaman , தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் திரு.
@ARROffice, இந்திய தொல்லியல் துறை இயக்குநர் திரு. கிஷோர் குமார் பாசா, இணை இயக்குநர் திரு. எஸ்.கே.மஞ்சுல், மாவட்ட ஆட்சியர் திரு. @srkias2012 , மேயர் திரு. @Jeganperiyasami , திருச்சி மண்டல தொல்லியல்துறை இயக்குநர் திரு. அருண்ராஜ், கண்காணிப்பாளர் திரு. காளிமுத்து, ஊராட்சித் தலைவர் திருமிகு. பார்வதி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
கடந்த 1876ல் இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. இந்த இடத்தில் அப்போதே அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பணி கடந்த 145 ஆண்டுகளாக தள்ளிப்போய் கொண்டிருந்தது. கடந்த 2020ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ஒன்றிய பட்ஜெட்டில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் 145 வருட கனவு நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications