மகளிர் சுய உதவிக் குழுக்கள் தனியாரிடம் வாங்குற கடனுக்கு அரசு பொறுப்பேற்காது -அமைச்சர் பெரியகருப்பன்
தூத்துக்குடி: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தனியாரிடம் வாங்குற கடனுக்கு அரசு பொறுப்பேற்காது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் சுளீர் பதிலளித்துள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த கடன் இலக்கான 20,000 கோடி ரூபாயை, திமுக அரசு 21,000 கோடியாக உயர்த்தியுள்ளது என விளக்கம் அளித்தார்.
ஆனால் அதையும் மீறி வெளியே கடன் வாங்குவதற்கெல்லாம் நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என அமைச்சர் பெரியகருப்பன் வினவியிருக்கிறார்.

தூத்துக்குடி பயணம்
தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து தங்கள் துறை சார்ந்த பணிகளை கள ஆய்வு செய்வதுடன் அதிகாரிகளை அழைத்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆய்வு சென்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தெரிவித்தார்.

மகளிர் சுய உதவி குழு
அதைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடர்பாக பேசிய அவர், சுழல் நிதி கொடுப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்படுவதாகவும் ஆனால் அதையும் மீறி தனியாரிடமும் வெளியாட்களிடமும் அவர்கள் வாங்கும் கடனுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது பளிச் பதிலளித்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த கடன் இலக்கான 20,000 கோடி ரூபாயை, திமுக அரசு 21,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தண்ணீர் தட்டுப்பாடு
தண்ணீர் தட்டுப்பாடு மட்டுமல்லாமல் இன்னும் பல அடிப்படைத் தேவைகளை ஊரகப் பகுதிகளில் செய்து கொடுக்க அரசும் முதல்வரும் தீவிரம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ள தகவலையும் அவர் வெளியிட்டார்.

அமைச்சர் கீதாஜீவன்
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மற்றொரு தூத்துக்குடி மாவட்ட அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் அதில் பங்கேற்றார். இதனிடையே தூத்துக்குடி மாநகராட்சி மேயரும் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரருமான ஜெகன் பெரியசாமி அதில் கலந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications