அரசூர் பூச்சிக்காடு அசந்துபோச்சு.. லாபத்தில் தொழிலாளர்களுக்கு பைக், தங்க நாணயம் தந்த டிராவல்ஸ் ஓனர்
தூத்துக்குடி: தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு லாபத்தில் ஒரு பங்கை வைத்து பைக்குகள், தங்க நாணயங்கள் வழங்கி ஊழியர்களுக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீனுடன் கறிவிருந்து வைத்து அசத்தினார் தனியார் டிராவல்ஸ் பேருந்து உரிமையாளர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிகாடு பகுதியை சேர்ந்த பட்டுராஜா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினம்தோறும் பேருந்து சேவைகளை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவரது நிறுவனத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியில் நடந்தது.
இந்த விழாவில் அவரது நிறுவனத்தின் டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள், ஓட்டுநர்கள், கிளீனர்கள், மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து 2-ம் ஆண்டு துவக்க விழாவின் போது சிறப்பாக செயல்பட்ட டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோரை தேர்வு செய்து 3 நபர்களுக்கு இருசக்கர வாகனங்களும், 10 கிராம், 8 கிராம், மற்றும் 6 கிராம் கொண்ட தங்க நாணயங்கள் தலா ஒருவருக்கும் வழங்கினார். மேலும் 100 நபர்களுக்கு 1500 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் பொருள்களை அந்நிறுவனத்தின் உரிமையாளர் பட்டுராஜா வழங்கினார்.

தொடர்ந்து தனது நிறுவனத்தில் பணிபுரிந்த டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள், ஊழியர்கள் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து சுடச்சுட மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன், உள்ளிட்ட அசைவ விருந்து வழங்கி அசத்தினார்.

மேலும் அடுத்த வருடம் சிறப்பாக செயல்படும் டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள் மற்றும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் புதிய இன்னோவா கார் ஒன்றை பரிசாக வழங்குவதாகவும் அந்நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications