பார்க்குறதுக்கு கல்.. பாறை மீன் தெரியும், மீனே பாறையான மர்மம் தெரியுமா? தூத்துக்குடியில் அதிசயம்
தூத்துக்குடி: வரலாறு எப்பொழுதும் புதிர்களையும் ஆச்சரியங்களையும் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது... பல தொல்லியல் ஆய்வுகள் மனித குலத்தின் கடந்த காலத்தை மீட்டெடுத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், கீழடியை போல, தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்து, ஆராய்ச்சியாளர்களிடம் வியப்பை கிளப்பி விட்டுள்ளதாம். இதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பு செய்தியாக உள்ளது. என்ன நடந்தது தூத்துக்குடியில்?
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது பட்டினமருதூர் என்ற கிராமம். இங்குள்ள வடக்கு பகுதியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நீண்டகாலமாக தொல்பொருள் ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

தொல்லியல் களம்
அந்தவகையில், அந்த பகுதிக்கு கொஞ்சம் தூரத்தில், பல தொன்மையான மண்பாண்ட சிதைவுகள், பல்லாயிரம் ஆண்டுகளாக புதையுண்ட தொன்மங்கள், கடல்சார் புதைப்படிமங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அப்படி கண்டெடுக்கப்பட்ட பொருட்களில், கையடக்கமான ஒரு மணல் கல் கருவி போன்ற பொருளும் இருந்துள்ளது.. அது பார்ப்பதற்கு ரொம்ப சாதாரணமாக கருங்கல்லை போல இருந்ததாம்.. அதாவது சின்ன பாறை துண்டு போல தெரிந்துள்ளது.. அதனால் அந்த பாறையை ஓரமாக விட்டுவிட்டு மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தி வந்துள்ளனர்.
குட்டி பாறை
பிறகு திடீரென, குட்டி பாறை மீது சந்தேகம் வந்தது.. அந்த பாறையை ஆய்வு செய்து பார்த்தால் என்ன? என்ற ஆர்வம் வந்தது.. உடனே அந்த பொருளை எடுத்து ஆய்வு செய்தபோது, ஆராய்ச்சியாளர்களே அதிர்ந்துவிட்டனர். காரணம், அது பாறை அல்ல. பாறை போல உருமாறிய மீனின் புதைப்படிமம் என்பதுதான்.
இதுகுறித்து வரலாறு மற்றும் தொல்பொருள் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "பட்டினமருதூர் கிராமத்தில் தென்கடைய பகுதியில்
கல்வெட்டை காண கடந்த 9ம்தேதி சென்றோம். அப்போது மண்பாண்ட சிதைவுகள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையகட்டட சிதைவுகள், கடல்சார் புதை படிமங்களை கண்டெடுத்தோம்.. ஆய்வில் கிடைத்த கடல்சார் புதை படிமங்களில் சில முத்துச்சிப்பிகளின் படிமங்களாகும்..
அதில் கையடக்க கல் தொன்மம் ஒன்றை கண்டெடுத்தோம். முதலில் இதை பாறை என்றே நினைத்திருந்தோம். பிறகு ஒரு சந்தேகத்தின் பேரில், அதனை ஸ்கேன் செய்தபோது, அதன் உள்ளே சில எச்சங்களின் துகள்களை பரவலாக காண முடிந்தது.
பாறை மீன் படிமம்
இந்த படிமத்துகள்களை ஆய்வு செய்கையில் சுண்ணாம்புக் கல் அல்லது பிற பாறைகள் போன்ற அடர்த்தியான கனிம பொருட்களுடன் ஒத்துப்போனது. பிறகுதான், அசல் எலும்பு பொருள், பல்லாண்டு காலமாக கனிமங்களாக மாறி போயிருப்பது தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, அதை ஆராயும்போது, அது ஒரு மீன் புதைப்படிவம் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
பல வருட காலமாக புதையுண்டு கிடந்ததால், அடர் அரக்கு சிகப்பு நிறத்துக்கும், வெளிர் மஞ்சள் நிறத்துக்கும் மாறியிருக்கிறது.. தற்போது, ஒளி ஊடுருவும் தன்மையையும் இது பெற்றிருக்கிறது. இந்த மீனுக்குள் இயற்கை பிசின் போன்ற தொன்மங்களையும் கண்டெடுத்துள்ளோம்.
எனினும் அது பிசினா? அல்லது கடல்சார் அம்பரின் (திமிங்கலத்தின் உமிழ்நீர்) படிமமா? என்று தெரியாததால், தீக்குச்சியால் எரித்து பார்த்தோம்.. எரியூட்டும்போது வெளிவந்த வாசனை நெடியானது, மாமிசம் அல்லது முடி எரிவதை போன்று இருந்தது.
மீன் புதைப்படிவம்
உடனே வேதியியல் சோதனைக்கு உட்படுத்தும்போதுதான், அது இயற்கை பிசின் (Resin) என்பது தெரியவந்தது.. அதாவது இது ஒரு மீன் புதைப்படிவம் என்பது உறுதியானது..
அதுமட்டுமல்ல, 100-110 கி.மீ.நீளம் கொண்ட கையடக்க பண்டைய மணல் கல் கருவியில், இருபுறமும் கண் போன்ற புள்ளிகள் உள்ளன.. அடிபாகம் இரண்டு வளைவு உள்ளன.. அப்போதுதான், இது புதையுண்ட மீனின் படிமமாக இருக்கலாம் என்பது தெரியவந்தது.. அநேகமாக இதன் காலகட்டம் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.
எனினும், மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதற்காக அதனை தேசிய வேளாண் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
உலகுக்கு தமிழர் நகர நாகரீகம், அவர்களின் மேம்பட்ட தொழில்நுட்ப அறிவை பறைசாற்ற இவையெல்லாம் அமையும்.. இங்குள்ள 5 அடி இறால் பண்ணை பள்ளங்களை தோண்டி அகழாய்வு செய்தால், பாண்டியர்களின் இருண்ட காலம் குறித்த வரலாறுகளை அறிய முடியும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications