தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்கவில்லையா? 10 ஆண்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கிய பாஜக.. மோடி சொன்ன டேட்டா!
தூத்துக்குடி: கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி கொடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை விடவும் 3 மடங்கு அதிகம் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, 11 ஆண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்துள்ளார். மாலத்தீவில் இருந்து நேரடியாகத் தூத்துக்குடி வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களின் முன்னுரிமை. மின் உற்பத்தி அதிகரிப்பால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகமாகும். தமிழ்நாட்டில் மட்டும் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம் பாம்பனில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஏராளமான ரயில் திட்டங்களை மத்திய அரசு அளித்துள்ளது.
மத்திய அரசின் ரயில்வே திட்டங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கிறது. அதேபோல் கூடங்குளம் அணுமின் திட்டத்தின் மூலம் மின்சார திட்டங்களுக்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட 3 மடங்கு அதிகமாகும். அதேபோல் கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து தூத்துக்குடி மண் புரட்சியின் சாட்சி என்று கூறிய மோடி, அங்கிருந்த அனைவரையும் தங்களின் மொபைலில் டார்ச் லைட் அடிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்.
கடந்த சில மாதங்களாகவே திமுக தரப்பில் மத்திய அரசுக் கல்வி நிதியை கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறது. அதற்கான பதிலாக மோடி கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கொடுத்திருப்பதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். அதேபோல் மோடியின் பேச்சில் இம்முறை தமிழக அரசு குறித்து பெரிய விமர்சனம் இல்லை என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications