திருநங்கை முடியை வெட்டி.. அசிங்கமாக திட்டி வீடியோ.. கோவில்பட்டியில் “கொடூரம்” - 2 பேர் கைது
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியில் திருநங்கைகள் இருவரை இளைஞர்கள் கொடூரமாக தாக்கி அவர்களின் தலைமுடியை வெட்டி அசிங்கமான வார்த்தைகளால் திட்டும் வீடியோ வெளியான நிலையில், இந்த செயலில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ளது கழுகுமடை கிராமம். இங்கு அரங்கேறி இருக்கும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2 திருநங்கைகளை இளைஞர்கள் கீழே தள்ளி கொடூரமாக தாக்கி அவர்களின் தலை முடியை கத்தரியில் வெட்டியதுடன் அதை வீடியோவாகவும் எடுத்து இருக்கின்றனர்.

கொடூர தாக்குதல்
அதில், "இவர்கள் எல்லாம் பசங்களிடம் ரூபாய் வாங்கிவிட்டு அலைகிறார்களே, இவர்களை என்ன செய்யலாம்?" என்று சொல்லியதுடன் அறுவறுப்பான வார்த்தைகளை சொல்லி திட்டுகிறார். இந்த வீடியோ முதல் திருநங்கை பொறியாளரும் சமூக ஆர்வலருமான கிரேஸ் பானு ட்விட்டரில் பதிவிட்டு கண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தி இருந்தார்.

கிரேஸ் பானு
அதில், "2 திருநங்கைகள் இந்த கும்பலால் தாக்கப்பட்டு உள்ளனர். எப்போது இதுபோன்ற வன்முறைகள் முடிவுக்கு வரும். இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறும் நேரத்தில் மக்கள் இதுபோன்று அமைதி காத்திக்கொண்டு இருக்காதீர்கள். எனது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இதுபோன்ற தாக்குதல்களை தினந்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள்." என்றார்.

தென்மண்டல போலீஸ்
மேலும் இந்த பதிவை தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, மாவட்ட காவல்துறை ட்விட்டர் கணக்குகளுடன் டேக் செய்து இருந்தார். பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவை ரீட்வீட் செய்த தமிழ்நாடு காவல்துறை தென் மண்டலம், குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது.

தூத்துக்குடி எஸ்பி
இதுகுறித்து ட்விட்டரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அளித்துள்ள விளக்கத்தில், "மேற்படி காணொளி பதிவில் உள்ள நபர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட அனைவரும் கண்டறியப்பட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications