எடப்பாடிக்கு காலக்கெடு விதிக்கலாமா.. செங்கோட்டையனுக்கு என்ன உரிமை இருக்கு.. கேட்கும் தளவாய் சுந்தரம்
தூத்துக்குடி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு கொடுக்கும் உரிமை செங்கோட்டையனுக்கு கிடையாது என்று எம்எல்ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு, தொந்தரவு கொடுத்தால் மக்களும், தொண்டர்களும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் திடீரென குரல் கொடுத்துள்ளார். ஏற்கனவே இதுதொடர்பாக 6 நிர்வாகிகளுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

அதேபோல், அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாட்கள் கெடு விதித்தார். செங்கோட்டையனின் கருத்துக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளில் இருந்தும் நீக்கி இருக்கிறார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
அதேபோல் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 7 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது. இதன்பின் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனது பதவிகளை ராஜினாமா செய்து கடிதங்களை அனுப்பி இருக்கின்றனர். இதனால் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோஷம் அதிகரித்துள்ளது.
அதற்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் பலரும் கருத்து கூற மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், செங்கோட்டையும் அதிமுக தொடக்கத்தில் இருந்து இருக்கிறார்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடு விதிக்கும் உரிமை செங்கோட்டையனுக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமிக்கு உதவுவதை விட்டுவிட்டு தொந்தரவு கொடுத்தால், எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? செங்கோட்டையனுக்கு அதிமுக ரத்தம் ஓடுவதாக கூறுவோர் தான் அவருக்கு பின் இருக்கிறார்கள்.
பொது வெளியில் பதவி வேண்டாம் என்று ஓபிஎஸ் கூறி வருகிறார். ஆனால் மோடிதான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ள அறிவுறுத்தியதாக கூறுகிறார். 10 நாள் காலக்கெடு என்று சொங்கோட்டையன் சொன்னால், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ன செய்ய முடியும்? யார் ஒன்றிணைய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications