பண்ணையில் கேட்ட "விநோத" சத்தம்.. தூத்துக்குடியே திகைச்சிடுச்சே.. அதென்ன சர்க்கரை பொங்கலா.. சூப்பர்ர்ல
வெளிநாட்டினர் தூத்துக்குடியில் பொங்கல் வைத்து தமிழர் முறைப்படி வழிப்பட்டனர்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பண்ணையில், வித்தியாசமான குலவை சத்தம் கேட்டதுமே, அங்கிருந்த மக்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.. என்ன நடக்கிறது என்று திரண்டு சென்று பார்த்ததில், அப்படியே வியந்துபோய் நின்றுவிட்டார்களாம்.. அப்படி என்ன நடந்தது?
தமிழகத்தில் டிராவல் இந்தியா என்ற அமைப்பு மூலம் வருடந்தோறும் 'ஆட்டோ ரிக்சா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இதன்மூலம், வெளிநாட்டை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு வந்து, தமிழகத்தின் பாரம்பரிய பகுதிகளை சுற்றிப்பார்ப்பார்கள்.. தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம், தமிழர்களின் பெருமைகள், கோவில்கள் போன்றவற்றை ஆட்டோ ரிக்ஷாவிலேயே சுற்றி பார்த்து மகிழ்வார்கள்..

ஆட்டோ ரிக்ஷா டூர்
பிறகு, ஏழை பள்ளி மாணவர்களுக்கு கட்டிடம் மற்றும் கல்வி உதவி தொகைகளையும் வழங்கிவிட்டு செல்வது இயல்பாக இருந்து வருகிறது. அப்படித்தான் இந்த வருடமும் பொங்கல் விழாவையொட்டி தமிழகம் வந்துவிட்டனர்.. இந்த ஆட்டோ ரிக்க்ஷா குழுவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, எஸ்டோனியா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 33 ஆண்களும், 4 பெண்களும் இடம் பெற்றனர்.. கடந்த 28ம் தேதி சென்னையில் டூர் துவங்கிய இவர்கள், பாண்டிச்சேரி, தஞ்சாவூர், ராஜபாளையம், ஆகிய பகுதிகளுக்கு சென்று விட்டு கடைசியாக தூத்துக்குடி வந்துள்ளனர்.

பண்ணையில் என்னாச்சு?
வரும்வழியில் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபம், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் இவர்கள் பார்வையிட்டனர். இறுதியாக, அருகே உள்ள சாயர்புரம் பிரம்ம ஜோதி என்ற பண்ணைக்கு வந்து சேர்ந்தனர்.. இந்த பிரம்மஜோதி பண்ணையில் இவர்கள் அனைவருக்குமே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.. அங்கு தங்கிய அனைத்து வெளிநாட்டு ஆண்களும், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டிகளையும், பெண்கள் சேலையையும் எப்படி அணிவது என்று கேட்டு, அதன்படியே அணிந்து கொண்டனர்..

பச்சரிசி வெல்லம்
பிறகு, பொங்கல் எப்படி வைப்பது என்பது குறித்து அவர்களுக்கு விளக்கம் தரப்பட்டது.. உடனே வேஷ்டி சேலைகளை அணிந்தபடியே, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பனை ஓலை வைத்து, பச்சரிசி வெல்லம் நெய்யிட்டு சர்க்கரை பொங்கலை வைத்தனர்.. இப்படி தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை இங்கு கொண்டாடியது தங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்ததாக அவர்கள் பூரித்து சொல்கிறார்கள்.

பொங்கலோ பொங்கல்
மொத்தம் 10 பானைகளில் பொங்கல் வைத்தனர்... அவர்களே அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் வைத்தனர். பொங்கல் பானை நிரம்பி வழிந்த போது பொங்கலோ, பொங்கல் என்ற முழக்கமிட்டதுடன், குலவைச் சத்தம் கொடுத்து அசத்தினர். பிறகு அவர்கள் சமைத்த பொங்கலை அவர்களே உண்டு மகிழ்ந்தனர்.. இவர்கள் பொங்கல் வைப்பதை, நம்ம ஊர் மக்கள் திரண்டிருந்து வேடிக்கை பார்த்து நெகிழ்ந்து போனார்கள்.












Click it and Unblock the Notifications