காய்கறி மார்க்கெட்டில்.. ஸ்டாலினை பார்த்ததுமே பதறிய பெண்.. கட்டியணைத்த கனிமொழி.. தூத்துக்குடி ஹேப்பி
தூத்துக்குடி: இன்றைய தினம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், திடீரென காய்கறி மார்க்கெட்டில் இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துவிட்டது.
எம்பி தேர்தல் பிரச்சாரம் அனலடித்து கொண்டிருக்கிறது.. திமுகவை பொறுத்தவரை, மொத்தம் 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.. இதுதவிர, நாமக்கல்லில் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் தங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிக்கு ராமநாதபுரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம், விசிகவுக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நெல்லை தொகுதி: திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், நெல்லையில் ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார் என்றும், விளவங்கோடு இடைத் தேர்தலில் தாரகை கட்பர்ட் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மயிலாடுதுறை இன்று இரவுக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகி உள்ளார்.. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்.
தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரச்சாரத்தை துவக்கி உள்ளார்.. காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இன்று காலையிலேயே வாக்கு சேகரிக்க துவங்கினார்.
பிரச்சாரங்கள்: வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலரும் முதல்வருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.
நேற்று, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சாரம் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதுடன், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். பிறகு, நேற்றிரவு தூத்துக்குடி வருகை தந்தார் முதல்வர் ஸ்டாலின்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சிந்தலக்கரையில் முதல்வர் பங்கேற்கும் பொது கூட்டம் நடக்க போகிறது.. அதில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கே.கனி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார்.. பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஒவ்வொரு ஊரிலும் தங்கியிருக்கும் முதல்வர், அன்றைய தினம் காலையில், அந்த ஊரில் வாக்கிங் செல்கிறார்.. அப்போது அந்த பகுதி மக்களிடம் வாக்குகளையும் சேகரித்து செல்கிறார்..
அந்தவகையில், நேற்றிரவு தூத்துக்குடியில் தங்கியிருந்த முதல்வர், இன்று அதிகாலை தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் வாக்கிங் சென்றார்.. பிறகு, தூத்துக்குடி நகர காய்கறி மார்க்கெட்டுக்குள் நுழைந்து, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக அங்குள்ள வியாபாரிகள் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
காய்கறி மார்க்கெட்: காய்கறி மார்க்கெட்டுக்குள் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் முதல்வர் ஸ்டாலின், வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பாட்டி, முதல்வர் ஸ்டாலினை நோக்கி அழுதுகொண்டே ஓடிவந்தார்.. அவரை பார்த்ததும் பதறிப்போன முதல்வர், என்ன ஏதென்று விசாரித்தார்..
காய்கறி வாங்குவதற்காக 1,500 ரூபாய் பணம் வைத்திருந்தாராம் அந்த பாட்டி.. ஆனால், கொண்டு வந்த பணத்தை எங்கியோ தொலைத்துவிட்டதாக சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுதார்...
கனிமொழி: இதைக்கேட்ட முதல்வர் ஸ்டாலின் அந்த பாட்டியை ஆறுதல்படுத்தினார்... உடனே அருகில் நின்றுகொண்டிருந்த திமுக எம்பி கனிமொழி, பாட்டியை கட்டியணைத்து சமாதானப்படுத்தினார்.
அதன்பிறகு, திமுக சார்பில் அவருக்கு 2,000 ரூபாய் பணம் அப்போதே வழங்கப்பட்டது.. அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பாட்டி, முதல்வருக்கும், கனிமொழிக்கும் நன்றி சொல்லிவிட்டு, கண்ணீரை துடைத்துக்கொண்டே நெகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.












Click it and Unblock the Notifications