தூத்துக்குடி அருகே ஒரே தெருவில் தூங்கிக் கொண்டிருந்த பெண் உட்பட 2 பேர் வெட்டிப் படுகொலை!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பெண் உட்பட 2 பேரை, அடுத்தடுத்து மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி என்பவர் தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில், பயங்கர ஆயுதங்களுடன் பொன்னுச்சாமியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள். உறங்கிக் கொண்டிருந்த அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

பின்னர், பொன்னுச்சாமியின் வீட்டிற்கு அருகே உள்ள பிச்சையா என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பிச்சையாவின் மனைவி ராஜாமணியையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அந்தக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீசார், 2 சடலங்களையும் கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே தெருவை சேர்ந்த இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா போதையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது நகை பறிப்புக்காக கொலை சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் 2 பேரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இருவர், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பூதலாபுரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications