தாசில்தார் ஆபீசில் யார் பாருங்க.. வண்டிய டக்னு திருப்பிய உதயநிதி.. திணறிய தூத்துக்குடி அரசு அலுவலகம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய அதிரடி ஆய்வுகளால், தூத்துக்குடியே திணறிப்போய்விட்டது.. மக்கள் பிரச்சனைகள் தீர்ப்பது குறித்து, அதிகாரிகளிடம் உதயநிதி முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது, மாவட்ட மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்..

கலந்தாய்வு கூட்டம்: அந்தவகையில், இன்றைய தினம் தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகள் கூட்டத்திலும், பிறகு திருமண நிகழ்ச்சியிலும் உதயநிதி பங்கேற்றார். தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழகத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசின் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.
அப்போது, டூவிபுரத்தில் உள்ள வருவாய் தாசில்தார் அலுவலகத்தில் திடீரென காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின், தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சுப்பையா மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் அளிக்கும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், காலதாமதம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
பிறகு, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, நில அளவை, வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் வழங்குவது போன்ற மக்களுக்கான சேவைகள் செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டறிந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
கலெக்டர் அலுவலகம்: இறுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது உதயநிதி பேசும்போது, மக்களுக்கு சீரிய முறையில் அரசின் சேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டதுடன், பொதுமக்களிடம் பெறும் மனுக்களை கனிவுடன் பரிசீலித்து உடனுக்குடன் தீர்வுகளை வழங்குமாறும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உதயநிதி, பொதுமக்கள் அளிக்கும் பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்..
நம்பிக்கை தந்த உதயநிதி: இந்த ஆய்வினை முடித்துவிட்டு கலெக்டர் அலுவலகத்தைவிட்டு உதயநிதி வெளியே வந்தபோது, ஏராளமான பொதுமக்கள் சாலையில் கோரிக்கை மனுக்களுடன் திரண்டிருந்தனர்.. அவர்களின் மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், அவைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உதயநிதி உறுதி தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.












Click it and Unblock the Notifications