முருகனுக்குத் தான் வெளிச்சம்.. திருச்செந்தூரில் மடிப்பிச்சை மோசடி! பிச்சை எடுக்கும் காசில் உல்லாசம்!
தூத்துக்குடி: வங்கக் கடலோரம் குடி கொண்டிருக்கும் திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களை பல வகையில் ஏமாற்றி வருகிறது ஒரு கும்பல். தரிசன மோசடி, அபிஷேகப் பொருள் விற்பனை மோசடி வரிசையில் தற்போது மடிப்பிச்சை மோசடி அரங்கேறி வருகிறது. குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை எடுப்பதாகக் கூறி யாசகம் பெரும் சிலர் அதை வைத்து மது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்ற கூற்றிற்கு இணங்க தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமான் பெரும்பாலும் மலைகளிலும், குன்றுகளில் தன் தலங்களை அமைத்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். ஆனால், அதற்கென்று விதிவிலக்காக கடற்கரையில் அமைந்துள்ள அற்புத ஆலயம்தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

கடல் அலைகளின் ஒலியே முருகனைப் போற்றும் வகையில் அமைந்திருக்கும், இந்த கோவில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாக பெருமை பெற்றுள்ளது. கோவில் வழிபாட்டை முடித்து வெளியில் வரும் போது, நடைபாதை மேலே செல்லும் வகையில் அமைந்துள்ளது.
அதாவது, சுவாமியை வணங்கி வெளியே வரும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயரவே போகிறார்கள் என்பதற்கான அடையாளமாகவே அந்த பாதை அமைந்துள்ளது என பக்தர்கள் நம்புகிறார்கள். இங்கு வழிபடும் மக்கள் பெரும்பாலும் திருமண தடை நீங்கும், தொழில் வளர்ச்சி ஏற்படும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நம்பிக்கையுடன் வருகிறார்கள்.
குறிப்பாக, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யும் சில பக்தர்கள், கோவில் முன்பு 'மடிபிச்சை' ஏந்தி, அதில் பக்தர்கள் வழங்கும் காணிக்கையை பின்னர் கோவில் உண்டியலில் நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், 'மடிப்பிச்சை' என்ற பெயரில் சிலர் பக்தர்களிடம் காணிக்கை பெற்று, அதனை தங்களது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையான சிலர் கோவில் முன்பு மடிபிச்சை ஏந்துவது போல் நின்று, பக்தர்களிடம் பெறப்படும் பணத்தை பயன்படுத்தி மது உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்குவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மடிபிச்சை ஏந்தி நின்றதாக கூறப்படும் நபரிடம் இளைஞர் நேரடியாக பேசி, அவர் பெறும் காணிக்கை தொடர்பாக கேள்வி எழுப்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே திருச்செந்தூர் முருகப்பெருமாள் கோவிலில் பிச்சைக்காரர்கள் திருநங்கைகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், இதனால் நிம்மதியாக முருகனை தரிசனம் செய்ய முடியவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் எளிதில் தரிசனம் செய்வதாக மோசடி ,அபிஷேக பொருட்கள் விற்பனை செய்வதாக மோசடி என பல்வேறு மோசடிகள் பக்தர்களை குறி வைத்து அரங்கில் வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்களை எளிதாக சுவாமி தரிசனம் செய்ய வைப்பதாகவும் ஒரு கும்பல் திருச்செந்தூர் பக்தர்களை ஏமாற்றி வருகிறது. இந்த நிலையில் குழந்தை வரம் வேண்டி ஏக்கத்தோடு வரும் பெற்றோர்களை குறி வைத்து தற்போது மடிப்பிச்சை மோசடியும் அரங்கேறி வருவது முருக பக்தர்களை கடும் அதிர்ச்சியின் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
