45 நிமிடம் சாற்றப்பட்ட திருச்செந்தூர் கோயில் நடை.. கோயில் யானை மிதித்து இருவர் பலியானதால் பரிகாரம்
தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் தெய்வானை என்கிற யானை இன்று திடீரென ஆக்ரோஷமாக மாறியது. கோயில் யானை மிதித்து பாகன் இருவர் உயிரிழந்த நிலையில், கோயில் நடை சுமார் 45 நிமிடங்கள் சாத்தப்பட்டது. தேவையான பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளிலே ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மற்ற ஐந்து படை வீடுகளும் குன்றின் மீது அமைந்துள்ள நிலையில், திருச்செந்தூரில் மட்டுமே கடற்கரை அருகே அமைந்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 25 வயது மதிக்கத்தக்கத் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. எப்போதும் அமைதியாகக் காணப்படும் இந்த யானை, விழாக் காலங்களில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும். பக்தர்களும் தெய்வானை யானைக்குப் பழங்கள் கொடுப்பார்கள்.
தெய்வானை: இந்த யானையை உதயகுமார் என்ற பாகன் பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த யானை அங்குக் கோயில் வளாகத்தில் உலா வரும். பக்தர்களுக்கும் ஆசி வழங்கும். அதன்படி இன்றும் திருச்செந்தூர் கோவில் வளாகத்தின் அருகே கொட்டகையில் தெய்வானை யானை இருந்தது. அப்போது யானைக்குப் பழம் தரப் பாகன் உதயகுமார் சென்றுள்ளார்.
உயிரிழப்பு: பாகன் உதயகுமாரின் உறவினர் சிசுபாலனும் அங்கு அப்போது இருந்ததாகத் தெரிகிறது. எப்போதும் அமைதியாகவே இருக்கும் தெய்வானை யானை இன்று திடீரென ஆக்ரோஷமாக மாறியிருக்கிறது. பாகன் உதயகுமாரையும் சிசுபாலனையும் மிதித்ததாகக் கூறப்படுகிறது. அதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த உதயகுமார் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொதுவாகப் பெண் யானைக்கு மதம் பிடிக்காது. அப்படியிருக்கும் போது தெய்வானை யானை திடீரென ஆக்ரோஷமானது ஏன் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நடை சாத்தப்பட்டது: இதற்கிடையே கோயில் யானை தெய்வானை மிதித்து இருவர் உயிரிழந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் நடை சுமார் 45 நிமிடங்களுக்குச் சாத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. பரிகார அனைத்தும் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மறுபுறம் ஆக்ரோஷமாக இருந்த தெய்வானை யானையும் இப்போது அமைதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. திடீரென தெய்வானை யானை ஆக்ரோஷமானது ஏன் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களும் சோதனை செய்தனர்.
என்ன காரணம்: அதில் உதயகுமார் பழம் தந்து கொண்டு இருந்த போது சிசுபாலன் யானையுடன் செல்வி எடுத்துள்ளார். நீண்ட நேரமாக அவர் செல்வி எடுத்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தெய்வானை யானை முதலில் சிசுபாலனை தாக்கியுள்ளது. அவரை காக்கப் பாகன் உதயகுமார் வந்த நிலையில், அவரையும் தாக்கியுள்ளது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.
அதேநேரம் கொஞ்ச நேரத்திலேயே தெய்வானை யானை அமைதியாகிவிட்டது. மேலும், அது சாப்பிட மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்கள் தெய்வானை யானையின் உடல்நிலையைக் கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications