எழுந்திருங்க.. பாகனின் உடலை தடவி அழுத திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை! கண்ணீர் விட்ட பக்தர்கள்.!
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானை மிதித்து பாகனும், மற்றொருவரும் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கோபத்தில் பாகனை மிதித்துக் கொன்று விட்டு பின்னர் அவரது உடலை தடவி தெய்வானை அழுதபடி எழுப்ப முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
அறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் போற்றப்படுகிறது. மற்ற இடங்களில் குன்றின் மேல் உள்ள கோவில்களில் குடிகொண்டிருக்கும் எம்பெருமான் முருகன் திருச்செந்தூரில் கடலோரத்தில் அரசாங்கம் புரிகிறார்.

இந்த கோவிலில் 26 வயதான யானை தெய்வானை 2006 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழா நேரங்களில் யானை சுவாமிக்கு முன்பாக வலம் வந்து பக்தர்களை ஆசிர்வதிப்பது வழக்கம்.
அதே போல ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் சிவபெருமான் ஐராவதம் உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவு கூறும் வகையில் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று யானை தெய்வானை உடல் முழுவதும் அரிசி மாவு, திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். அந்த நாளில் மட்டும் யானை தெய்வானையை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார். யானை தெய்வானை தங்குவதற்காக கோவில் ராஜபுரம் கோபுரம் அருகே குடில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு பக்தர்கள் யானைக்கு உணவு வழங்கி ஆசீர்வாதம் பெறுவதோடு அதனை செல்போனில் படம் பிடித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் யானையின் உடல் நலனை கருதி யானைக்கு யாரும் உணவு வழங்க கூடாது என்பதற்காக சிறிய வலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாகங்கள் மட்டுமே யானைக்கு உணவு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று யானையின் தலைமை பாகனான ராதாகிருஷ்ணன், பாகன் செந்தில் குமார், உதயகுமார் ஆகியோர் யானை அருகே நின்று கொண்டிருந்தனர். ராதாகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்ற நிலையில் உதயகுமாரும் அவரது உறவினரான கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த சிசுபாலன் என்ற முன்னாள் ராணுவ வீரர் குடிலுக்கு சென்றனர்.
அப்போது திடீரென யானை இருவரையும் தாக்கியதில் சிசுபாலனும் உதயகுமாரும் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து கோயில் பணியாளர்கள் யானை மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சமாதானப்படுத்தி இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் உயரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதால் ஊழியர்களும் பாகனின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகளுக்கு பிறகு சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் குறித்து மாவட்ட வன அலுவலர்கள் நேரில் வந்து யானையை பார்வையிட்டனர். மேலும் திருநெல்வேலி வனத்துறை மருத்துவக் குழுவினரும் யானையை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் பாகனின் உறவினரும் முன்னாள் ராணுவ வீரருமான சிசுபாலன் யானை அருகே நின்று செல்பி எடுத்ததோடு, அதனை தொட்டதாக கூறப்படுகிறது. புதிய நபர் தன்னை தொட்டதால் ஆத்திரமடைந்த தெய்வானை தும்பிக்கையால் தாக்கி காலால் மிதித்துள்ளது. மேலும் காப்பாற்ற வந்த உதயகுமாரையும் தாக்கி இருக்கிறது.
அதற்கு பிறகு தான் உதயகுமார் தன்னுடைய பாகன் என்பதை புரிந்து கொண்ட யானை தெய்வானை அழுதபடி தும்பிக்கையால் அவரது உடலை தடவி எழுப்ப முயன்றுள்ளது. காரணம் உதயகுமார் தான் யானை தெய்வானையை அன்பாக பார்த்துக் கொள்வாராம். மேலும் யானையை தினமும் குளிப்பாட்டி பிரகாரத்தை சுற்றி வருவதோடு அதற்கு உணவு வழங்கும் வேலையும் செய்து கொண்டிருக்கிறார். மற்றவர்களை விட உதயகுமாரிடம் தான் தெய்வானை மிகவும் இணக்கமாக இருக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
இந்த நிலையில் "யானைக்கு மதம் பிடிக்க வாய்ப்பில்லை. பொதுவாக ஆண் யானைகளுக்கு தான் மதம் பிடிக்கும். ஆனால் தெய்வானை பெண் யானை என்பதால் அதற்கு மதம் பிடிக்க வாய்ப்பில்லை, மேலும் மற்ற கோவில் யானைகளைவிட தெய்வானை மிகவும் அமைதியான மிருகம். தற்போதும் அது அமைதியாகவே இருக்கிறது. ஆனால் பாகனை கொன்றுவிட்ட குற்ற உணர்ச்சி காரணமாக அது உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறது. அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது" என வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications