கோவில்பட்டியில் சிறுவன் கொலையில் விலகாத மர்மம்! கடிதம் எழுதி வைத்து பெற்றோர் தற்கொலை முயற்சி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த சிறுவனின் பெற்றோர், தாத்தா ஆகிய 3 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர், இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.

அதில் 5ஆம் வகுப்பு படித்து வந்த மகனுக்கு அம்மை போட்டதால் அவர் 10 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி சிறுவனுக்கு உணவு கொடுத்துவிட்டு பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுவன், தனது பாட்டிக்கு போன் போட்டு தான் வீட்டில் தனியாக இருப்பதாக கூறி அவரை அழைத்தார். அந்த பாட்டியும் பேரனை பார்க்க வீட்டுக்கு சென்ற போது அங்கு டிவி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. சிறுவனை காணவில்லை.
ஒரு வேளை கழிப்பறைக்கு போயிருப்பாரோ என எண்ணி அந்த பாட்டி, சிறுவனின் பெயரை அழைத்தபடியே தேடினார். ஆனால் அங்கு அவர் இல்லை என தெரிகிறது. இதனால் பதறிய அந்த பாட்டி அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். ஆனாலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் சிறுவன் அடுத்த நாள் அதிகாலை பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கிடந்தான். இதையடுத்து போலீஸார் அந்த உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரவு முழுக்க குழந்தையை தேடிய நிலையில் அதிகாலை வேளையில் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்ததால் கொலைக்காரன் அதே தெருவை சேர்ந்தவனாக இருக்கலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் 3 நாட்களாகியும் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. சிறுவனின் வீட்டருகே கஞ்சா, கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து சிறுவனின் தாய், போலீஸில் புகார் செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே தாய் மீதான ஆத்திரத்தில் அவர்கள் யாராவது கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த நிலையில் தனது மகனுக்கு நீதி கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் சிறுவனின் பெற்றோரும், தாத்தாவும் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9ஆம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இன்று அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் கழுத்தில் இருந்த நகை மாயமாகி உள்ள நிலையில், புகார் அளித்த அன்றே தீவிரமாக காவல்துறை விசாரித்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர். விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. இது தான் சட்டம் ஒழுங்கை ஒரு முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமா திரு. @mkstalin?
சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications