தூத்துக்குடியிலிருந்து சென்ற கடல் உணவுகளை.. பாதியில் திருப்பி அனுப்பிய அமெரிக்கா! வரியால் நஷ்டம்
தூத்துக்குடி: டிரம்ப் விதித்திருக்கும் 50% வரி காரணமாக இந்தியா பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுகளை, அந்நாட்டு வர்த்தகர்கள் பாதி வழியில் திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றனர்.
600 கண்டெய்னர்களில் சுமார் 500 டன் இறால், கணவாய் உள்ளிட்ட கடல் உணவுகள் தூத்துக்குடியிலிருந்து கண்டெய்னர் கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் வரி காரணமாக, அந்நாட்டு வர்த்தகர்கள் கடல் உணவு கப்பலை பாதி வழியில் திருப்பி அனுப்பியிருக்கின்றனர். இதனால் தமிழகத்தை சேர்ந்த கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

எங்கள் உத்தரவை மீறி இந்த கப்பல் அமெரிக்காவுக்கு வந்தால், உணவை நாங்கள் டெலிவரி எடுக்க மாட்டோம் என்று அந்நாட்டு வணிகர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் கப்பல் வேறு வழியின்றி பாதி வழியில் தூத்துக்குடிக்கு வந்துக்கொண்டிருக்கிறது.
இந்திய கடல் பகுதியில் கிடைக்கும் முதல் தர இறால்கள் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு தூத்துக்குடியிலிருந்து நிறைய கப்பல்கள் செல்கின்றன. கடல் உணவு பொருட்களை சாதாரண கண்டெய்னர்களில் ஏற்றி அனுப்பிவிட முடியாது. உணவு கெட்டுப் போய்விடும். எனவே, இதற்கென தனியாக ரீஃபர் கண்டெய்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு 40 அடி ரீஃபர் கண்டெய்னரை அமெரிக்காவுக்கு அனுப்ப சராசரியாக ரூ.8.81 லட்சம் செலவாகும்.
அப்படியெனில் மேலே குறிப்பிட்டதை போல 600 கண்டெய்னர்கள் எனில் குறைந்தபட்சம் ரூ.35 கோடி முதல் ரூ.50 கோடி வரை ஆகும். மார்க்ஸ், ஹபக்-லாய்டு என இருபெறும் கப்பல் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அடிக்கடி மாற்றியமைக்கின்றன. சர்வதேச அளவில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து இந்த கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. எனவே மேற்சொன்ன கட்டணம் அடிப்படையானதுதான்.
இது தவிர அமெரிக்காவில் உள்ள மேற்கு கடற்கரையான லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சரக்கு போகிறதா? அல்லது கிழக்கு கடற்கரையான நியூயார்க்குக்கு போகிறதா என்பதை பொறுத்தும் கட்டணங்கள் மாறும். எப்படி பார்த்தாலும் தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு இந்த வரி மூலம் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
CRISIL நிறுவனத்தின் அறிக்கையின்படி, அமெரிக்கா விதித்த அதிக வரியால், இந்தியாவின் இறால் ஏற்றுமதி இந்த நிதியாண்டில் 15-18% வரை குறையக்கூடும். இதனால், கடந்த நான்கு ஆண்டுகளாக வளர்ச்சி காணாமல் இருந்த கடல் உணவுத்துறை, மேலும் 18-20% வருவாய் இழப்பைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரி காரணமாக, வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் ஈக்வடார் போன்ற நாடுகளில் இருந்து வரும் கடல் உணவுகள், இந்திய கடல் உணவுகளை விட மிகவும் மலிவானதாக மாறியிருக்கிறது. இந்த நாடுகள் அமெரிக்க கடல் உணவு துறையில், இந்தியாவின் இடத்தை கைப்பற்றியிருக்கின்றன.
கடல் உணவு ஏற்றுமதியை தாண்டி வேறு சில துறைகளிலும் இந்த வரியானது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டம் இந்த வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரிலிருந்து ஆடைகள் அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாமல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications