"ஊருக்கு 10 பேர் மட்டுமே விஜய் ரசிகர்களாக இருக்காங்க.." பாய்ந்து வந்த அதிமுக.. சரமாரி தாக்கு
தூத்துக்குடி: அதிமுக சார்பில் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து ஒருமையில் விமர்சித்தார். மேலும், ஊருக்கு 10 பேர் மட்டுமே விஜய் ரசிகர்களாக இருப்பதாகத் தெரிவித்த அவர், விஜய்யால் ஒரு தேர்தலுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் விமர்சித்தார்.
தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் அதிமுக சார்பில் கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டார். அப்போது அவர் அதிமுக உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் அட்டைகளை வழங்கினார்.

தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய சண்முகநாதன் பாஜகவை மிகக் கடுமையாகச் சாடினார். மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து ஒருமையில் பேசிய அவர், விஜய் கட்சி தொடங்கியுள்ளதையும் விமர்சித்தார்.
கடும் தாக்கு: அங்கே பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், "எம்ஜிஆர் காலத்தில் இருந்து பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் எங்குப் போனார்கள் எனத் தெரியவில்லை.. ரஜினியும் கமலும் கூட அப்படி தான் என்று கூறினார்.எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஒரே அளவில் தான் ரசிகர்கள் இருந்தார்கள்.
கமல் கட்சி: ஆனால், சிவாஜி கட்சி தொடங்கிய போது அவரால் லயிக்க முடியவில்லை. ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறேன்.. தொடங்குகிறேன் என்று கடைசி வரை சொல்லிக் கொண்டு மட்டுமே இருந்தார். கமல் ஹாசனும் கட்சி தொடங்கினார். அவர் 2.5% வாக்குக்களை மட்டுமே பெற்றார் நமக்கு வரும் வாக்குகளைப் பிரித்துத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே கமலை கட்சி தொடங்க வைத்தார்கள். இப்போது அவர் அரசியலில் அனாதையாக இருக்கிறார்.

விஜய் அரசியல்: இப்போது விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் செல்வாக்கு பெற்றவர்.. இத்தனை சதவிகித வாக்கு போகும்.. அப்படி இப்படி எனச் சொல்கிறார்கள். ஆனால், ஓரிரு ஆண்டுகள் மட்டுமே அவரால் இருக்க முடியும். ஒரு தேர்தலைக் கூட சமாளிக்க முடியாது. விஜயகாந்த் கூட நம்முடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துக்கு வர முடிந்தது. அவர் தனியாகப் போட்டிப் போட்ட போது ஒரே ஒரு சீட்டில் மட்டுமே அவரால் வெல்ல முடிந்தது. அதிமுக உடன் கூட்டணி வைத்த பிறகே எதிர்க்கட்சி தலைவராக முடிந்தது. இதுதான் தமிழக அரசியல்.
10 பேர்: ரஜினிகாந்த்தை விடவா விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஊருக்கு ஒரு 10 பேர் இருப்பார்கள்.. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அது போதுமா.. அந்த 10 பேரையும் நாம் நமது கட்சியில் சேர்க்க வேண்டும்
பாஜக மீது தாக்கு: அதேபோல பாஜகவைப் பாருங்கள்.. தேர்தலுக்கு முன்பு 300 சீட் அது இது என்றார்கள். ஆனால், இப்போது பாருங்கள்.. ஆட்சியை நடத்தவே நிதிஷ்குமார் கையை பிடிக்கிறார். சந்திரபாபு நாயுடு கையை பிடிக்கிறார். அவர்கள் இருவரும் இல்லை என்றால் இப்போது பாஜகவால் ஆட்சியைத் தக்க வைக்கவே முடியாது. அதுதான் இன்று பாஜகவில் நிலை.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு பல தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றன. இருப்பினும், அதில் எந்தவொரு தொகுதியிலும் பாஜகவால் வெல்ல முடியவில்லை. அதேபோல தமிழ்நாட்டிலும் பாஜகவுக்கு எந்தவொரு செல்வாக்கும் இல்லை" என்று சரமாரியாகச் சாடினார்.












Click it and Unblock the Notifications