ஓட்டு கேட்க விடலை.. பூத்களை கைப்பற்றிட்டாங்க! மறுதேர்தலே தீர்வு.. வேலூரில் ஏசி சண்முகம் குமுறல்
வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் பல இடங்களில் பூத்கள் கைப்பற்றப்பட்டதாக புகார்கள் வந்துள்ள நிலையில் அங்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென வேலூர் தொகுதியில் போட்டியிட்டவரும், புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் பரபரப்பு புகாரினை முன்வைத்துள்ளார்.
குடியாத்தத்தில் ஆணழகன் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்," வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் 95 சதவீதம் நேர்மையாக நடைபெற்றது. அதே வேளையில் அணைக்கட்டு தொகுதி பீஞ்சமந்தை மலை கிராமங்களில் எஸ்டி பிரிவு மக்கள் வசிக்கும் மூன்று ஊராட்சிகளில் எங்களை வாக்கு கேட்க அனுமதிக்கவில்லை.
திமுக அராஜகம்: மேலும் அப்பகுதிக்குச் செல்ல 3 சாலைகள் உள்ளன. அந்த சாலைகளில் குண்டர்களை வைத்து எங்களை வாக்கு சேகரிக்க திமுகவினர் அனுமதிக்கவில்லை. மேலும் அப்பகுதியில் எங்களது கூட்டணி கட்சியினர் பூத் ஏஜென்ட் அமைக்கவும் அனுமதிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள மூன்று வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வந்துள்ளது. அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும். இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற ஒரு மாதம் மேல இருப்பதால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
பூத் கைப்பற்றப்பட்டது: அதேபோல் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி மேல்மாயில் பகுதியில் வாக்குச் சாவடி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அங்கேயும் மறு தேர்தல் நடத்த வேண்டும். அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ரேங்கில் பல்வேறு தொல்லைகள் கொடுத்துள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் எங்களது கூட்டணி கட்சியினரை தாக்கியுள்ளனர். காவல்துறையில் புகார் அளித்த போது தாக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீது மாவட்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் அராஜகம்: 95 சதவீதம் தான் வேலூர் பகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வாகனங்களை மட்டும் துரத்தி துரத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். ஆளும் கட்சியினர் வாகனங்களை அவர்கள் சோதனை செய்யவில்லை வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 15 இடங்களில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 6:00 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்கப்பட்டதில் அதிக அளவு முறைகேடு நடந்ததாக தகவல்கள் வந்துள்ளது.
வேட்பாளருக்கு சாதகம்: அது குறித்து ஒவ்வொரு தொகுதியாக விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும். தமிழகத்தில் பல இடங்களில் தாசில்தார் மற்றும் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் துணையோடு அதிமுக மற்றும் பாரதிய ஜனதாவிற்கு வாக்கு வரும் பகுதிகளில் வாக்காளர்கள் பெயர் நீக்கி உள்ளனர். நடிகர் சூரியின் பெயரையும் நீக்கி உள்ளனர். ஒரு பூத்திற்கு 100 வாக்குகள் நீக்கப்பட்டால் அது மற்றொரு வேட்பாளருக்கு சாதகமாக அமைகிறது" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.












Click it and Unblock the Notifications