அரக்கோணம்.. வேறு தொகுதிக்கு தாவுகிறாரா ஜெகத்ரட்சகன்? திமுக ரேஸில் முந்தும் ஏவி சாரதி, காந்தி மகன்
வேலூர்: அரக்கோணம் தொகுதியின் எம்.பியாக உள்ள ஜெகத்ரட்சகன் வேறு தொகுதிக்கு மாற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அப்படி அவர் தொகுதி மாறினால் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க பொருளாளர் ஏ.வி.சாரதிக்கு சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் போட்டியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தியும் இருக்கிறாராம்.
அரக்கோணம் தொகுதி என்பது ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரிய தொகுதியாகும். அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி என 6 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சரான ஜெகத்ரட்சகன் இருக்கிறார்..

ஜெகத்ரட்சகன் திமுகவில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவருக்குத்தான் அரக்கோணம் மீண்டும் ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் ஜெகத்ரட்சகன் அரக்கோணம் தொகுதியை பொறுத்தவரை 1999, 2009, 2019 ஆகிய 9ல் முடியும் ஆண்டுகளில் தான் வெற்றி பெற்றுள்ளார். 2004, 2014ல் அவர் வெற்றி பெறவில்லை.
ஜெகத்ரட்சகனை பொறுத்தவரை ஜாதகத்தின் மீதும், ஆன்மிகத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் என்பதால் வரக்கூடிய தேர்தல், இரட்டை இலக்க ஆண்டில் நடைபெறவிருப்பதால், சென்டிமென்ட்டாக வேறு தொகுதிக்குத் தாவ உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தொகுதியில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்த ஜெகத்ரட்சகன் பெரிய அளவில் நிறைவேற்றவில்லை என்ற அதிமுக, பாஜக உள்ளிடட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த நிலையில், திமுகவின் கோட்டைகளில் ஒன்றான அரக்கோணம் தொகுதியில் திமுகவின் தேர்தல் குழு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது..
ஜாதக நம்பிக்கையின்படி ஜெகத்ரட்சகன் வேறொரு தொகுதிக்கு தாவினால், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க பொருளாளராக உள்ள ஏ.வி.சாரதிக்கு 'சீட்' கிடைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏ.வி.சாரதி சிமெண்ட் ஏஜென்சி, மற்றும் கல்குவாரி நடத்தி வருகிறார். திமுக தலைமையுடன் நெருக்கமாகியுள்ளள ஏவி சாரதி எப்படியும் இந்த முறை சீட் பெற்றுவிட வேண்டும் என்று மும்முரமாகி வருவதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தியும் சீட் எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் காந்தி குறித்து அண்மையில் அண்ணாமலை சாரமாரியாக விமர்சித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியிருந்தார். இதுபெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்போது அண்ணாமலை கூறுகையில், அமைச்சர் காந்தியின் பெயருக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பொருத்தமே கிடையாது. நெசவுத் தொழிலாளர்களிடம் வேட்டி, புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பதால் கமிஷன் காந்தி என்றழைக்கப்படும் இவர், பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார். விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது" என்று கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரம் அதிமுகவை பொறுத்தவரை அரக்கோணம் தொகுதியில் சோளிங்கர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.எல்.விஜயன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் சில வாரங்களில் அதிமுக திமுக இரண்டுமே வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதால் யாருக்கு சீட் கிடைக்கும் என்பதில் பெரிய போட்டியே நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications