என் கட்டை கீழே விழும் வரை! காட்பாடி தொகுதிக்காக உழைப்பேன்! துரைமுருகன் உருக்கம்
வேலூர்: என் கட்டை கீழே விழும் வரை காட்பாடி சட்டசபை தொகுதியின் மக்களுக்காக உழைத்துக் கொண்டேதான் இருப்பேன் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: என்னை சிலர் கேட்கிறார்கள், எப்படி சார் ஒரே தொகுதியில் இத்தனை முறை வெற்றி பெறுகிறீர்கள் என்று!

நான் இந்த காட்பாடி தொகுதியை தொகுதியாக நினைக்கவில்லை. இது எனக்கு ஒரு கோவில். இந்த கோயிலில் ஓட்டு போடும் மக்கள் எனது தெய்வங்கள். அதனால்தான் நான் இத்தனை முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளேன்.
சட்டசபையில் கருணாநிதி 56 ஆண்டுகள் இருந்துள்ளார். அவருக்கு அடுத்து 53 ஆண்டுகள் சட்டசபையில் இருந்து வருகிறேன். என் கட்டை கீழே விழுகிற வரை நான் காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன். எங்களுக்கு எல்லாம் அதிக வேலை இருக்கிறது.
இந்த டிவிக்காரங்க வேறு 7ஆம் தேதி மழை பெய்யும் என சொல்லிவிடுகிறார்கள். அதிலும் பயங்கரமான மழை பெய்யும் என சொல்லிவிடுவதால் முதல்வர் உடனே எங்களை தொகுதிக்கு போக சொல்லிவிடுகிறார். அங்கு போய் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக பாடுபட்டு வருகிறோம்.
மற்ற தொகுதிகளை விட நான் அதிக திட்டங்களை காட்பாடி தொகுதிக்கு கொண்டு வந்துள்ளேன் என துரைமுருகன் பேசியிருந்தார். கருணாநிதி காலத்திலிருந்தே அரசியலில் இருந்து வரும் துரைமுருகன் காமெடியாக பேசுவதில் வல்லவர். அது போல் சில சமயங்களில் உருக்கமாகவும் பேசிவிடுவார்.
அது போல் கடந்த ஆகஸ்ட் மாதம் பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் திறப்பு விழாவில் கூட அவர் உருக்கமாகவே பேசியிருந்தார். இந்த புதிய பாலம் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்தப் பாலத்தால் என்னை பிடிக்காதவர்கள் கூட 100 ஆண்டுகளுக்கும் என் பெயரை சொல்வார்கள்.
மேலும் காட்பாடியில் இருந்து சித்தூர் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய தொகுதியை கோயிலாக நினைத்து பணியாற்றி வருகிறேன். காட்பாடி தொகுதிதான் எனக்கு கோயில். என்னை வளர்த்தவர்கள் நீங்கள், என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
என் உயிர் பிரியும் போது கூட காட்பாடி என என் தொகுதியின் பெயரை சொல்லிக் கொண்டேதான் உயிர் பிரியும் என உருக்கமாக பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications