சனாதனத்தை எந்த கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது! ஆளுநர் ரவிக்கு அமைச்சர் துரைமுருகன் காரசார பதிலடி
வேலூர்: சனாதனத்தை எந்த கொம்பனாலும் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சனாதனத்தின் அருமை பெருமைகளை சுட்டிக்காட்டி ஆளுநர் ரவி பேசியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துரைமுருகன் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆளுநர் ரவிக்கு திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்திருக்கும் சூழலில், இப்போது துரைமுருகனும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்திற்கு அடுத்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்லவுள்ளதால் அது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை காட்பாடியில் முகாமிட்டு கவனித்து வருகிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரைமுருகன், சனாதனத்திற்கு எதிராக பொங்கித் தீர்த்துவிட்டார். இந்த மண்ணின் பெருமை தெரியாமல் சனாதனம் பற்றி ஆளுநர் ரவி பேசியிருக்கிறார் என்றும் எந்த கொம்பனாலும் அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது எனவும் பதிலடி தந்துள்ளார்.

தமிழக மண்
சனாதனத்திற்கும் சனாதனக் கொள்கைகளுக்கும் முடிவு கட்டிய மண் இந்த தமிழக மண் என பெருமிதம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன். அதைத் தொடர்ந்து பேசிய அவர், மேகேதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் ஸ்டண்ட் செய்வதாக கர்நாடக முதல்வர் பசசராஜ் பொம்மை கூறியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் துரைமுருகன் கூறினார். கர்நாடக முதல்வரின் தந்தை பொம்மை மிகச் சிறந்த சீர்த்திருத்தவாதியாக இருந்தவர் என்றும் அவர் மகன் இப்படி பேசலாமா எனவும் வேதனைத் தெரிவித்தார்.

தமிழக உரிமை
தொடர்ந்து காவிரியில் தமிழகத்தின் உரிமைகள் பற்றி விலாவாரியாக பேசிய அவர், இறுதியாக திமுகவை தொட்டால் சும்மா விடமாட்டோம் என்றும் திமுக ஜல்லிக்கட்டு மாடு போன்றது எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தான் அரசியல் ஸ்டண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளார் என துரைமுருகன் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர் இன்னும் ஏதோ சொல்ல வர, அவரை இடைமறித்த ஆ.ராஜா வேறு ஏதோ ஒன்றை கூறி திசை திருப்பினார்.

ஊரில் முகாம்
முதலமைச்சர் வேலூர் வருகையை ஒட்டி ஊரிலேயே இருந்து அரசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அடுத்தவாரம் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், வேலூரில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications