மகன் படிக்கிறான் என அறையை திறக்காத தாய்... தூக்கில் தொங்கிய பிளஸ் 2 மாணவன் - தேர்வு பயத்தால் தற்கொலை
வேலூர்: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் தொடர்ந்து தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த மாணவ மாணவிகள் முதல் நாளான இன்று உற்சாகத்துடன் தேர்வு எழுத சென்றனர்.
மற்ற மாணவர்களை போலவே வேலூரை சேர்ந்த மோனிஷ் என்ற 16 வயது மாணவரும் தேர்வுக்கு தயாராகி வந்தார். அரியூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் கோபி என்பவரது மகனான மோனிஷ் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

தந்தையை இழந்த மாணவன்
இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தாய் பரிமளா அங்குள்ள காலணி நிறுவனத்தில் வேலைக்குச் சென்று மோனிஷை படிக்க வைத்தார். நேற்று மாலை பரிமளா பணி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது மோனிஷ் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அறைக்குள் சென்ற மாணவன்
இன்று தேர்வு தொடங்குவதால் மாணவன் மோனிஷை படிக்குமாறு பரிமளா அறிவுரை வழங்கினார். இதனையடுத்து மோனிஷ் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார். மகன் தேர்வுக்கு படிக்கிறான் என நினைத்து பரிமாளாவும் அந்த அறைக்கு செல்லவில்லை. ஆனால் அறையில் இருந்த மோனிஷ் தேர்வு எழுத பயந்ததாக கூறப்படுறது.

தூக்கில் தொங்கிய மாணவன்
இதனால் மனமுடைந்த மோனிஷ் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் மோனிஷ் அறையிலிருந்து வெளியே வராததால் தாய் பரிமளா கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்த அவர், அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

போலீசார் விசாரணை
தகவலறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு தொடங்கிய நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications