வாணியம்பாடியில் வாயடைக்க வைத்த பெங்களூர் பெண்.. தங்கநகை அடகு கடை ஓனர் ஏமாந்தது எப்படி?
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தும்பேரி கூட்டரோட்டில் திலீப்குமார் என்பவர் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். இவரது நகைக்கடையில் மூன்று சவரன் தங்க நகை என்று போலி நகைகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த அர்ப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த திலீப்குமார் என்பவர் தும்பேரி கூட்டரோட்டில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 17-ந் தேதி இவரது கடைக்கு காரில் வந்த பெண் ஒருவர், 3 பவுன் தங்க செயினை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பெற்று சென்றுள்ளார். அந்த நகையை திலீப் குமார் சோதனை செய்தபோது, செயினில் கொக்கி மட்டுமே தங்கம் என்பதும் மற்றவை போலி என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திலீப்குமார், வாணியம்பாடி அருகே அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலி நகைகளை அடகு வைத்த பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், நகையை அடகு வைத்து சென்றது பெங்களூருவை சேர்ந்த ரஞ்சனாசிங் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பெங்களூரு சென்ற அம்பலூர் போலீசார் அவரை கைது செய்து, அம்பலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து, விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக இதே வாணியம்பாடியில் உள்ள நகை கடை ஒன்றில், 19 வயது இளம்பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து தன்னிடம் இருந்த போலி நகையை வைத்து, 2 கிராம் தங்க மோதிரத்தை திருட முயன்ற சம்பவம் கடந்த இரண்டு நாள் முன்பு நடந்துள்ளது. அந்த பெண் நகையை மாற்ற முயன்றபோது, கடை உரிமையாளர் அவரை கையும், களவுமாக பிடித்ததால் சிக்கி கொண்டார்.
பின்னர் இது குறித்து நகை கடை உரிமையாளர் போலீசுக்கு தகவல் தந்தார்.இதையடுத்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணிடம் இருந்து பல போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கடந்த ஒரு மாதம் முன்பு திருப்பூர் போலீஸ் எஸ்.ஐ. மனைவி ஒருவர் 'போலி' நகைகளை அடமானம் வைத்து, தனியார் வங்கியில், 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்ஐயாக உள்ளவரின் மனைவி ஹேமலதா, என்பவர் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் கடந்த சில மாதங்கள் முன்பு, 60 சவரன் நகையை அடகு வைத்து, 50 லட்சம் ரூபாய் பெற்றார். நகையை மீட்கும் காலம் வந்ததும், நகையை மீட்குமாறு வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். ஆனால் உரிய அவகாசத்துக்குள் பணத்தை செலுத்தவில்லை. நகையை விற்று கடனை சரிக்கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது தான் நகை போலி நகை என்பது தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஐ மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Click it and Unblock the Notifications
