பெரியாரை தரக்குறைவாக பேசுபவனின் பிறப்பை நான் சந்தேகப்படுகிறேன்.. துரைமுருகன் கருத்தால் சர்ச்சை
வேலூர்: பெரியாரை பற்றி தரக்குறைவாக பேசுகிறவனின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. பெரியாரை பற்றி சீமான் கூறிய கருத்துகள் சர்ச்சையாகி இருக்கும் சூழலில் அமைச்சர் துரைமுருகன் இப்படி கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். தமிழ் தேசிய அரசியலை அவர் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். அதோடு திராவிடத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். குறிப்பாக திமுகவை அவர் கடுமையாக விளாசி வருகிறார்.

இதற்கிடையே தான் சீமான், இப்போது பெரியாரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக பெரியார் குறித்து சீமான் கூறும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
அதாவது, ‛‛பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன தொடர்பு உள்ளது. பெரியார் தமிழ் மொழியை, சங்க இலக்கியங்களை தொடர்ந்து பழித்து பேசி வந்தார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியுள்ளார்.
பெரியார் பெண்ணிய உரிமை பற்றி பேசவில்லை. அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெரியாருக்கு கொள்கை என்பதே கிடையாது. அவருக்கும் சமூக நீதிக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்று தொடர்ந்து சீமான் கூறி வருகிறார். சீமானின் இந்த பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் திராவிட கழகம்,பெரியாரிஸ்ட்டுகள் சீமான் கருத்தால் கொதித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெரியார் குறித்த சீமானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாநிலம் முழுவதும் பல போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமான் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இன்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ பெரியாரை பற்றி கடந்த 2, 3 நாட்களாக அதிகமாக தரக்குறைவாக பேசுகின்றனர். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் துரைமுருகன், ‛‛பெரியாரை பற்றி தரக்குறைவாக பேசுகிறவனின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்'' என்று கூறினார். இதன்மூலம் சீமானின் பெயரை கூறாமல் அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனம் என்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. துரைமுருகனின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications