சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு 6 வழி சாலையாக நெடுஞ்சாலை துறையின் மூலம் மாற்றப்பட்டது. அதில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு வழித்தடம் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை, வேலூர், பெங்களூரு மற்றும் மும்பையை இணைக்கும் மிக முக்கியமான தொழில்துறை வழித்தடம் இதுவாகும். ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த ஆறு வழிச்சாலை விரிவாக்கம் அவசியம் என்று மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதோடு மட்டுமில்லாமல், உள்ளூர் வாகனங்கள் நெடுஞ்சாலையில் இடையூறு இல்லாமல் செல்ல இருபுறமும் தார்ச்சாலையிலான நவீன 'சர்வீஸ் சாலைகள்' மற்றும் முறையான தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டன. வாலாஜாபேட்டை, சென்னைசமுத்திரம், காவேரிப்பாக்கம் போன்ற முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்க வாகனக் கீழ்வழிச் சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டன. அத்துடன் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலை ஆறு வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது அதில் ஒரு வழிப்பாதை மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகன வரை அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலை மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..
மேலும் இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாததால் தற்காலிகமாக அந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் . மேலும் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையிலேயே சாலையை அவசரமாக திறந்து வைத்த பின்னர் மீண்டும் மூடுவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து முழு சாலையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications