திருப்பத்தூர் அருகே ஸ்கூட்டரில் மனைவியுடன் வந்த ஓட்டல் உரிமையாளர்.. கண் இமைக்கும் நேரத்தில் சோகம்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வளைவில் திரும்பிய பேருந்து, அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் மீது உரசியது. இதில் கீழே விழுந்த ஓட்டல் உரிமையாளரின் மனைவி பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். அவரது கணவரான ஓட்டல் உரிமையாளர் படுகாயம் அடைந்தார் . அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பார்ப்போம்.
சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர், வளைவில் திரும்பும் போது மிக கவனமாக செல்ல வேண்டும். பேருந்து வருகிறது என்றால், வழி உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதேபோல் பேருந்து ஓட்டுநர்களும் சாலையில் ஓரத்தில் வருபவர்களை உரசாத வகையில் செல்ல வேண்டும்..சிறிய கவனக்குறைவு ஒருவரின் உயிரையே பறித்துவிடும்.

சிலர் பேருந்து உள்ளிட்ட வாகனத்தை ஓவர்டேக் செய்வார்கள்.. எதிரே வரும் வாகனங்கள் திடீரென ஓவர்டேக் செய்த காரணத்தால் வேறு வழியின்றி மோதிவிடுகிறார்கள். பைக் போன்ற வாகனங்களில் செல்வோர் உயிரிழப்பது இதனால் தான் அதிகமாக நடக்கிறது. அண்மையில் கூட காரில் வந்தவர் திடீரென ஓவர்டேக் செய்ததால், எதிரே பைக்கில் வந்தவர் உயிரைவிட்டார். அதேபோல் வளைவுகளில் திரும்பும் போது கவனிக்காமல் திருப்பினாலும் பெரும் விபத்து ஏற்படும். அப்படித்தான் திருப்பத்தூர் அருகே நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த நாகதேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவரது மனைவி பவுனம்மாள் (50). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மணி, பவுனம்மாள் தம்பதி. தாசிரியப்பனூர் பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
நேற்று காலை ஓட்டலில் பணிகளை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் மணி தனது மனைவி பவுனம்மாளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாட்டறம்பள்ளியில் இருந்து அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை ஆலங்காயம் பகுதியை சேர்ந்த டிரைவர் குமார் ஓட்டினார். குருபவலானினுகுண்டா என்ற இடத்தில் உள்ள வளைவில் பஸ்சை டிரைவர் இடதுபுறமாக திருப்பியபோது இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது உரசியிருக்கிறது.
இதில் நிலை தடுமாறிய மணி மற்றும் அவரது மனைவி பவுனம்மாள் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பஸ்சின் பின் சக்கரத்தில் பவுனம்மாள் சிக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மணி இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதை கண்ட அந்த பகுதி மக்கள் ஓட்டல் உரிமையாளர் மணியை உடனடியாக மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பவுனம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications