ஆம்பூரில் முனியம்மா வீட்டில் கோதுமை நாகப்பாம்பு.. 3 நாளாய் சுற்றி வந்து.. ஆடிப் போன திருப்பத்தூர்
திருப்பத்தூர்: குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.. காரணம், சந்து பொந்துகளில், இடுக்குகளில் பாம்புகள் தங்கியிருக்கலாம் என்பதால், முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.. இந்நிலையில், திருப்பத்தூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கோடை காலத்தில் வறட்சி காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வந்துவிடுவது வழக்கமாகும். ஆனால் பாம்புகளை பொறுத்தவரையில், குளிர் மற்றும் மழை காலங்களில் வெப்பம் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிடக்கூடியவை..
குறிப்பாக சந்து பொந்துகள், இடுக்குகள் போன்ற இடங்களில் உஷ்ணத்துக்காக தஞ்சமடையும். இதில் பெரும்பாலும் தஞ்சமடைவது ஏசி மிஷின்கள், வாகனங்களுக்கு உட்பகுதியில்தான்.

தற்போது நவம்பர் மாத குளிர்காலத்தில் பாம்புகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சேலம், நாமக்கல், திருப்பூர் போன்ற பகுதிகளில் அடிக்கடி பாம்புகள் தென்பட்டு வருகின்றன.குடியிருப்பு பகுதிகளில், வாகனங்களில் பாம்புகளை கண்டு அலறி அடித்து ஓடும் மக்கள், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தந்து வரவழைத்துள்ளனர்.. வீரர்களும் போராடி, அந்தந்த இடத்தில் காணப்பட்ட பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.4 நாட்களுக்கு முன்பு நாமக்கல்-சேலம் சாலையில், ஒரு தம்பதி காரில் சென்று கொண்டிருந்தபோது, கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த சிறிய பாம்பு, காரின் பக்கவாட்டு கண்ணாடியில் இருந்து வெளியே வந்துள்ளது..
கார் கண்ணாடியில் பாம்பு
கார் கண்ணாடியில் பாம்பை பார்த்ததுமே தம்பதி இருவருமே அதிர்ச்சியடைந்து காரை ஓரமாக நிறுத்திவிட்டார்கள். பிறகு அந்த வழியாக சென்றவர்கள் வன விலங்கு மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து, அந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றனர்.வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, பாம்பு கார் கண்ணாடியில் நெளிவதை தம்பதி தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தனர்.இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் பீதியை கிளப்பிவிட்டுள்ளது.ஆம்பூர் அடுத்துள்ள தேவலாபுரம்.. இந்த ஊராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் 60 வயது முனியம்மாள்.. கணவரை இழந்து முனியம்மாள் கடந்த சில வருடங்களாகவே வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
கோதுமை நாகப்பாம்பு
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முனியம்மா வீட்டிற்குள் 7 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு புகுந்துவிட்டது..கோதுமை நாகப்பாம்பு (Wheat Cobra) என்பது கோதுமை நிறத்திலும், கோதுமைத்தானியம் போன்ற புள்ளிகளையும் கொண்ட ஒரு வகை நாகப்பாம்பு ஆகும். இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது.முனியம்மா வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு, அந்த வீட்டையே படம் எடுத்து சுற்றி சுற்றி வந்துள்ளது.. பாம்பை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்த முனியம்மாள், செய்வதறியாமல் திகைத்து கொண்டு இருந்துள்ளார்..மேலும் யாரிடமும் பாம்பு வந்ததை பற்றி சொல்லாமல் அச்சத்துடன் வீட்டில் மூன்று நாட்களாகவே தங்கி இருந்துள்ளார்..பிறகு 4வது நாள் பக்கத்து வீட்டாரிடம் மட்டும் பாம்பு வீட்டுக்குள் இருப்பதை முனியம்மா சொன்னாராம்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.. சிறிது நேரத்தில் ஆம்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து முனியம்மாவின் வீட்டுக்குள் சென்றனர்.. அங்கே கோதுமை நாகப்பாம்பு படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்ததாம்..
வழிபாடு நடத்திய முனியம்மா
அந்த பாம்பினை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி பிடித்து வீரர்கள், இறுதியாக பத்திரமாக வெளியே கொண்டு வந்தார்கள்..ஆனால், முனியம்மாள் திடீரென படம் எடுத்து ஆடிய அந்த நாகப்பாம்பிற்கு கற்பூரம் ஏற்றி வழிபட ஆரம்பித்துவிட்டார்.. ஏன் என்னை இப்படி பயப்பட வைக்கிறாய்? எங்கேயாவது கண் தெரியாத இடத்திற்கு போ என்று கை கூப்பி வழிபட்டார்.. இதைப்பார்த்து அங்கிருந்த சிலர் பரவசத்தில் கும்பிட்டனர்.பிறகு தீயணைப்புத் துறையினர் பிடிக்கப்பட்ட நாகப்பாம்பினை வனத்துறை பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்
வெலவெலத்த திருப்பத்தூர்
3 நாட்களாக முனியம்மா வீட்டில் படம் எடுத்து நாகப்பாம்பு சுற்றித் திரிந்தது என்றும், அந்த பாம்புக்கு முனியம்மாள் கற்பூரம் ஏற்றி வழிபட்டார் என்றும் செய்திகள் காட்டுத்தீ போல பரவிவிடவும், திருப்பத்தூர் மக்கள் பலர் இன்னமும் வெலவெலத்து போயிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications